குஜராத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கத்துக்கு மாறாக ஏன் காலம் கடந்து கூட்டப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும், `பொதுவாக மக்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதம் கூட்டப்படும். அதைத் தொடர்ந்து, லோக் சபா மற்றும் ராஜ்ய சபா அடுத்த ஒரு மாதத்துக்கு நாட்டின் பிரச்னைகள் குறித்து விரிவாக கலந்துரையாடும். ஆனால், இம்முறையோ, குளிர்க்கால கூட்டத்தொடர் குஜராத் தேர்தலுக்குப் பிறகு கூட்டப்பட உள்ளது. குளிர்காலக் கூட்டத் தொடரை தம் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கூட்டி, ஜனநாயக நடைமுறைகள் மீது நிழல் போர்த்தியுள்ளது மோடி தலைமையிலான அரசு’ என்று விமர்சனம் செய்துள்ளார்.