ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆண்டு, ஆஷஸ் தொடர் வரும் 23-ம் தேதி, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பனில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு இரண்டு அணி வீரர்களும் ஆயத்தமாகிவரும் சூழலில், ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வார்னருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் பேசிய வார்னர், `என் கழுத்தில் பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தால் கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இந்த ஒரு சின்ன விஷயம் என்னை ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவதிலிருந்து தடுத்துவிடாது. கழுத்தில் இருக்கும் பிரச்னை சரியாக சிகிச்சை எடுத்த வருகிறேன். அடுத்த ஓரிரு நாள்களில் அது முழுவதுமாகக் குணமடைந்துவிடும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.