‘‘கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவை. ஸ்ட்ரைக்கர் எண்டில் நீங்கள் நிற்கிறீர்கள். இந்த மாதிரியான சூழலில் யார் பெளலராக இருந்தால் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’’
‘‘வேர்ல்டுலயே யார் பெஸ்ட் பெளலரோ, அவர்தான் வேணும். அவரோட பந்துல சிக்ஸ் அடிச்சி வின் பண்ணணும். அந்த பெளலர் பந்தை அடிச்சாத்தான், எனக்கு கான்ஃபிடன்ஸ் கிடைக்கும்’’ என்றார் தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர். அந்த நம்பிக்கைதான் அவர் 18 மாத காயத்தில் இருந்து மீண்டு வரக் காரணம்; இன்று முதன்முதலாக இந்திய அணியின் ஜெர்ஸி அணியக் காரணம்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இடம்பெற்றிருக்கிறார் விஜய் சங்கர். ஆல் ரவுண்டர். தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்குத் தேர்வான 27-வது வீரர். 2011-க்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த முதல் தமிழக வீரர்.
2014-15 ரஞ்சி சீசனில் தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த வீரர் விருது வாங்கிய விஜய் சங்கர், இந்திய அணிக்குத் தேர்வானது ஆச்சர்யமில்லை. இந்திய அளவில் ஃபாஸ்ட் பெளலிங் ஆல் ரவுண்டர்களில் முக்கியமானவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அணியில் இடம்பிடித்திருக்க வேண்டியவர். இந்த அழைப்பே கொஞ்சம் தாமதம்தான். ரஞ்சிப் போட்டிகளில் பிஸியாக இருந்த விஜய் சங்கர், முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற தகவல் அறிந்ததும் படு குஷி.
‘‘இந்தியன் டீமுக்கு செலக்ட் ஆகப் போறேன்னு எனக்கு முன்னாடியே தெரியும். செலக்டர்ஸ் கூப்பிட்டு, ரெடியா இருன்னு சொன்னாங்க. அஃபீஸியலா நியூஸ் வந்ததும் செம ஹேப்பி’’ என்றார். ‘புவனேஸ்வர் குமாருக்கு மாற்றாக தேர்வுசெய்யப்பட்டிருப்பதால், அநேகமாக பிளேயிங் லெவனிலேயே கூட இடம் கிடைக்கலாம். இல்லையா’ என்றதும், ‘‘செலக்ட் பண்ணா கலக்கலாம். இப்போதைக்கு நான் அதைப் பத்தியெல்லாம் யோசிக்கலை ப்ரோ. இந்தியன் டீம்ல செலக்ட் ஆனதே பெரிய விஷயம். எப்ப, எந்த இடத்துல இறக்கி விட்டாலும், எந்த ரோல் கொடுத்தாலும் என்னை நான் ப்ரூவ் பண்ணிடுவேன். எப்படியோ, இந்தியன் டீம்ல இருக்கணும்ங்குற கனவு பலிச்சிடுச்சு’’ என்று சொன்னவர், நாளை இந்திய அணியுடன் இணைகிறார்.
2012-ல் தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பிடித்தபின், விஜய் சங்கரின் கிராப் இறங்கவில்லை. முதல் ரஞ்சி இன்னிங்ஸிலேயே ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் அடித்தவர், அடுத்த போட்டியில் அடித்தது சதம். அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்ளூர் போட்டிகளில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டர். சிலசமயம், லிமிடெட் ஓவர்களில் தமிழகத்தின் கேப்டன். 2014-15 சீசன் அவர் கிரிக்கெட் வாழ்வின் பொற்காலம். அந்த ரஞ்சி சீசனின் நாக்-அவுட் போட்டிகளில் 111, 82, 91, 103 ரன்கள் அடித்ததோடு, கணிசமான விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். அந்த சீசனில் அவரது சராசரி 57.7! இதைப் பார்த்து ‘இந்தா பிடி’ என சிறந்த பிளேயர் வீரர் விருதை வழங்கியது தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் (TNCA).