ஆஸ்திரேலியா அருகே உள்ள நியூ கலிடோனியா தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா அருகே தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்து உள்ள மிகப்பெரிய தீவுக்கூட்டம் நியூ கலிடோனியா ஆகும். இங்கு 20–க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கும் இந்த தீவுகள் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த தீவுகள் பசிபிக் கடலில் நெருப்பு வளையம் என்னும் பகுதியில் அமைந்தவை. எனவே இங்கு எரிமலைகள் வெடிப்பதும், நிலநடுக்கம் ஏற்படுவதும் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வாகும்.
இந்த நிலையில் இங்கு உள்ள லாயல்டி தீவில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.43 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5 மணி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கட்டிடங்கள் குலுங்கின
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் நவ்மியா நகரில் கட்டிடங்கள் குலுங்கின. அலுவலகங்கள் வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அசைந்தாடின.
இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி உயரமான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை.
சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கத்தால் நியூ கலிடோனியா மற்றும் வானுவாட்டு தீவுகளில் உள்ள கடலோர பகுதிகளில் பயங்கரமான சுனாமிக்கு வாய்ப்பு இருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்தது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முதலில் ஒரு மீட்டர் உயரத்துக்கும் அதைத் தொடர்ந்து இதை விட பல மடங்கு உயரத்துக்கும் அலைகள் எழுந்து வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதலில் ஒரு மீட்டர் உயர அளவிற்கு சுனாமி அலைகள் உருவாயின.
இது, கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது.
பாதுகாப்பாக வெளியேற்றம்
இதைத்தொடர்ந்து தென் பசிபிக் கடலில் நியூகலிடோனியா மற்றும் வானுவாட்டு தீவுகளில் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர். எனினும் அடுத்த சில மணி நேரங்களில் பெரிய அளவில் சுனாமி அலைகள் எதுவும் உருவாகவில்லை.
அதே நேரம், தங்கள் நாடுகளை சுனாமி தாக்குவதற்கு வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் தெரிவித்தன.
நேற்று முன்தினம் ஒரே நாளில் இப்பகுதியில் 10–க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை அனைத்துமே ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிக்கும் அதிகமாக இருந்தது. நேற்றைய பலத்த நில அதிர்வை தொடர்ந்து ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளிக்கும் அதிகமாக பல நிலநடுக்கங்கள் இப்பகுதியில் ஏற்பட்டதால் மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்தனர்.