அயோத்தியில், முஸ்லிம் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின், வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ரவிசங்கர், அயோத்தி பிரச்னைக்கு சுமுக தீர்வு காண முடியும் என்ற
நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறினார்.
உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். அயோத்தியில் உள்ள ராமர் கோவில் நிலம் குறித்த பிரச்னைக்கு தீர்வு காண, பிரச்னையில் தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும், வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ரவிசங்கர் பேச்சு
நடத்தி வருகிறார்.இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு காண, அனைவருடனும் பேச்சு நடத்தி, தான் உதவ தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உ.பி.,க்கு சென்ற ரவிசங்கர், லக்னோவில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். நேற்று அயோத்தி சென்ற அவர், முஸ்லிம் தலைவர்களை சந்தித்து பேசினார்.அதன் பின், ரவிசங்கர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அயோத்தி விவகாரம் போன்ற பிரச்னைகளுக்கு, பேச்சு மூலம் தீர்வு காண்பது நல்லது. அனைத்து தரப்பினரிடமும் பேசி வருகிறேன். நான் எந்த ஒரு தரப்பையும் சார்ந்தவன் அல்ல. தற்போது எடுத்துள்ள நடவடிக்கை சற்று தாமதமானது தான் என்றாலும், இப்போதாவது இந்த முயற்சியை எடுத்திருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.அயோத்தி பிரச்னையில் சுமுக தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டின் நலனுக்காக, நம்மால், மிகப் பெரிய விஷயத்தை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.