கர்நாடகாவில் தனியார் மருத்துவமனைகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் 24 நோயாளிகள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் கட்டணம், சிகிச்சை குறைபாடு உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர மாநில அரசு முடிவெடுத்துள்ளது. குளிர்கால கூட்டத் தொடரில் இந்த சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதை மனித உரிமை ஆர்வலர்களும், தலித் அமைப்பினரும் வரவேற்றுள்ளனர்.
ஆனால், இந்திய மருத்துவச் சங்கம், கர்நாடக தனியார் மருத்துவமனை கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கர்நாடக அரசை கண்டித்து கடந்த 3-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தினர்.
இதற்கிடையில் கடந்த 13-ம் தேதி பெல்காமில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மருத்துவமனை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியானது.
இதனால் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் , கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கர்நாடக தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தனியார் மருத்துவமனைகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால் அரசு மருத்துவமனைகளிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கூட்டம் அலை மோதியது.
பல இடங்களில் தனியார் மருத்துவமனைகளை கண்டித்து நோயாளிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். முழு அடைப்பினால் நேற்று மாநிலம் முழுவதும் 24 நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியாகினர்.
தனியார் மருத்துவமனை சங்கத் தலைவர் ஜெயன்னா கூறுகையில், ‘’ கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ் குமார் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். எனவே பெங்களூருவில் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்.
வெள்ளிக்கிழமை முதல்வர் சித்தராமையா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு காணப்பட்டால், மாநிலம் தழுவிய போராட்டத்தையும் வாபஸ் பெறுவோம்’’ என்றார்.