முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஓராண்டு ஆகப்போகிறது. இந்த தருணத்தில் தமிழகத்தில் நடந்த மெகா ரெய்டின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனிலும் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டிலும் 17-ம் தேதி வருமானவரி சோதனை நடைபெற்றது. சோதனையை கேள்விப்பட்டு, நள்ளிரவில், ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ்கார்டன் வந்தார்.
காரில் இருந்து இறங்கிய தீபா, ஜெயலலிதாவின் வீடு நோக்கிச் சென்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆவேசம் அடைந்த தீபா, “என்னுடைய வீட்டுக்குள் போவதற்கு ஏன் அனுமதி மறுக்கிறீர்கள். இது என் அத்தையின் வீடு, முறைப்படி நான்தான் வாரிசு. நான் இப்போது என் அத்தை வீட்டுக்குள் போக வேண்டும். என்னை அனுமதியுங்கள்” என்று போலீஸாரிடம் சொன்னார். ஆனால், அவரை அனுமதிக்க போலீஸார் மறுத்து விட்டனர்.
கட்டாயப்படுத்தி எழுதி வாங்கினார்களா?
கோபத்திலும், ஆவேசத்திலும் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். ஆனாலும், போலீஸார் அசைந்து கொடுக்கவில்லை. ஏறக்குறை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போஸ்கார்டன் சாலையில் தீபா காத்திருந்தார். எனினும் அவர் அனுமதிக்கப்படவில்லை. தீபா அங்கிருந்த செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “போயஸ் கார்டன் வீடு குறித்து என் அத்தை யார் பெயரிலும் உயில் எழுதி வைத்திருப்பதாகத் தெரியவில்லை. அப்படி யார் பெயரிலாவது எழுதி இருந்தால், அவரது வாரிசுகள் என்ற பெயரில் , எங்களிடம் அவர் அனுமதி கேட்டிருப்பார்.
வாரிசுகளுக்கு எழுதி வைக்காமல், வேறு ஒருவருக்கு சொத்தை எழுதி வைத்தால், வாரிசுகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. எனவேதான், அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறேன். தீபக்கும் இந்த சொத்துக்கு வாரிசுதான். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. சசிகலா உறவினர்கள் பெயரில் மட்டும் அல்ல, பூங்குன்றன் பெயரில் கூட அத்தை எழுதி வைக்கவில்லை.
ஒருவேளை அத்தையை கட்டாயப்படுத்தி சட்டத்தை மீறி ச சிகலா குடும்பத்தினர், கையெழுத்து வாங்கியிருக்கலாம் என்றுதன் நினைக்கிறேன். எனவே, சசிகலாவின் மொத்த குடும்பத்தையும் கைது செய்து உள்ளே வைக்க வேண்டும். அத்தை உடல் நலக்குறைவாக இருந்த போது, அப்போலோ சென்ற என்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். என்னை அனுமதித்திருந்தால், அத்தை உயிரோடு இருந்திருப்பார். இப்போதும் அனுமதிக்க மறுக்கின்றனர்.
சி.பி.ஐ விசாரணை தேவை
காவல்துறையினர் என்னை ஏன் தடுக்கின்றனர். என்னுடைய உரிமையை நிலைநாட்ட அனுமதிக்க மறுக்கிறார்கள். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் வீடியோ கேசட் விற்கத்தான் அத்தையிடம் வந்தனர். என் அத்தை சினிமாவில் வியர்வை சிந்த, ரத்தம் சிந்த நடித்து சம்பாதித பணத்தில் கட்டிய வீடு இது. எனக்கு சொத்துகள் எல்லாம் வேண்டாம். அத்தையின் வீட்டுக்குள் என்னை அனுமதிக்க வேண்டும். போலீஸ்தான் விவேக்கை அனுமதித்துள்ளனர். அம்மா ஸ்தானத்தில் இருந்து என்னை வளர்த்திருக்கிறார் அத்தை. அவருடைய கர்ச்சீப்புக்குக் கூட நான்தான் உரிமையாளர். சட்டம் அதைத்தான் சொல்கிறது. சசிகலா உறவினர்கள் அனைவரின் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
அத்தை பெயரை கெடுக்க வேண்டும் என்றுதான் சசிகலா குடும்பத்தினர் இது போல செயல்படுகின்றனர். சசிகலா குடும்பத்தின் முழு ஒத்துழைப்போடுதான் இந்த ரெய்டு நடக்கிறது. அதனால்தான் விவேக் உள்ளே இருக்கிறார். ஜெயல லிதா மருத்துவமனையில் இருக்கும் போது வீடியோ எடுக்கப்பட்டதாக் சொல்லப்பட்டது தவறு. அப்படி எந்த வீடியோவும் இல்லை” என்றார்.