ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை.
அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு, படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார்.
இந்த படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.
நான் பேரறிஞர் அண்ணாதுரையின் தீவிர ரசிகன். அந்த பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இந்த படத்தை நானும் வாங்கியிருக்கிறேன்.
இந்த படத்தில் ரசிகர்களுக்கு தேவையான நல்ல செண்டிமெண்டும் இருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் இது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்றார் அபிராமி ராமநாதன்.
பறவை அமர்ந்திருப்பது கிளையை நம்பி அல்ல, சிறகை நம்பி என்ற பழமொழிக்கேற்ப வாழ்ந்து வரும் விஜய் ஆண்டனிக்கு சிறகாக அவரது மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருக்கிறார்.
படத்தில் ஜிஎஸ்டி பற்றி ஒரு பாடலில் எழுதி இருந்தேன். ஆனால் சென்சாரில் அது கட் ஆகி விட்டது என்றார் பாடலாசிரியர் அருண் பாரதி.
ஒவ்வொரு முதல் பட இயக்குனருக்கும் முதல் பட வாய்ப்பு என்பது சாதாரணம் அல்ல. இப்போது முதல் பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் குறைந்து விட்டனர்.
விஜய் ஆண்டனி தான் நிறைய இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அறம் போல நல்ல சினிமாக்கள் வந்து தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்றார் இயக்குனர் வசந்தபாலன்.
அண்ணாதுரை தலைப்பை வைத்து விட்டு, தவறான படத்தை எடுக்க மாட்டார்கள். சர்ச்சைக்காக தலைப்பு வைப்பவர்கள் அல்ல சர்த்குமாரும், விஜய் ஆண்டனியும். இந்த படத்துக்கு சர்ச்சை என எதுவும் தேவையில்லை, கதையே போதும்.
உங்கள் சொந்த தயாரிப்பை தாண்டி வெளி தயாரிப்பாளர்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கள் என்றார் தயாரிப்பாளர் சிவா.
மோடி ஒன் இந்தியா ஒன் டேக்ஸ் என்ற கொள்கையில் தான் ஜிஎஸ்டி கொண்டு வந்தார். ஆனால் தமிழ்நாட்டில் எண்டர்டெய்ன்மெண்ட் டேக்ஸ் கூடுதலாக வசூலிப்பது சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் பாதிக்கிறது.
அரசுக்கு நெருக்கமாக இருக்கும் சரத்குமார் அதை பற்றி நமது தமிழ்நாடு அரசிடம் எடுத்து சொல்லி அதை நீக்க வலியுறுத்த வேண்டும் என்றார் காட்ரகட்டா பிரசாத்.
எந்த வீட்டில் பெண்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அங்கு வெற்றி அதிகம் இருக்கும். அந்த வகையில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருப்பது விஜய் ஆண்டனியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
நல்ல கதைகளாக தேர்வு செய்து படத்துக்கு படம் எல்லைகளை கடந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. மழை உட்பட எந்த எதிர்ப்பு வந்தாலும் அண்ணாதுரை வெற்றி பெறும் என்றார் தனஞ்செயன்.
கதைத்தேர்வில் விஜய் ஆண்டனிக்கு நிகர் அவரே தான். காளி படத்தின் கதையை சொல்லும் முன்னர் அவரிடம் நான் வேறு ஒரு கதையை சொன்னேன், அவர் மிகவும் வெளிப்படையாக அந்த கதை பிடிக்கவில்லை என சொல்லி நிராகரித்தார். அதுதான் அவர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.
அண்ணாதுரைனு தலைப்பு வச்சிருக்கீங்க, ரிலீஸ் நேரத்தில் ஐடி ரெய்டு வரலாம், தலைப்பை மாற்ற சொல்லி சிலர் வரலாம், ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இதனால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.