கோல்கட்டா டெஸ்டில் இந்திய அணி திணறல் துவக்கம் கண்டது. மழை காரணமாக முதல் நாளில் 12 ஓவர்கள் மட்டும் தான் வீசப்பட்டன.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் 4 மணி நேரம் தாமதமாக துவங்கியது.
‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமால், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷமி, உமேஷ், புவனேஷ்வர் என 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ‘சுழலில்’ அஷ்வின், ஜடேஜா இடம் பிடித்தனர். தமிழகத்தின் முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
மோசமான துவக்கம்: இந்திய அணிக்கு ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தந்தது. ஈரப்பதம் காரணமாக ஆடுகளம் வேகத்துக்கு கைகொடுக்க, இலங்கை அணி துவக்கத்திலேயே மிரட்டியது. போட்டியின் முதல் ஓவரை லக்மல் வீசினார்.
இதன் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் டக் அவுட்டானார். தொடர்ந்து தொல்லை கொடுத்த இவர், ஷிகர் தவானை (8) போல்டாக்கினார். இந்திய அணி 13 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின், புஜாரா, கேப்டன் கோஹ்லி ஜோடி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர்.
கோஹ்லி அதிர்ச்சி: இந்த நிலையில், மழை குறுக்கிட ஆட்டம் 50 நிமிடம் தடைப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கியதும், கோஹ்லியை ‘டக்’ அவுட்டாக்கினார் லக்மல். இதற்கு கோஹ்லி ‘ரிவியூ’ கேட்ட போதும், பலன் கிடைக்கவில்லை.
நேற்று வீசப்பட்ட 11.5 ஓவரில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. புஜாரா (8), ரகானே (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
இலங்கை சார்பில் அதிகபட்சமாக 6 ஓவர் வீசிய லக்மல், ரன் எதுவும் விட்டுத்தராமல் 3 விக்கெட் வீழ்த்தினார். மீதமுள்ள நான்கு நாட்களும், அரைமணி நேரம் முன்னதாக, காலை 9:00 மணிக்கு போட்டி துவங்கும்.
கடந்த 1969ம் ஆண்டுக்குப்பின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ‘டாஸ்’ வென்று ‘பவுலிங்’ தேர்வு செய்த இரண்டாவது அணியானது இலங்கை. இதற்கு முன், பாகிஸ்தான் (1987) இப்படி செய்திருந்தது.
லட்சுமணனுக்கு கவுரவம்
இந்திய முன்னாள் வீரர் லட்சுமண், ஈடன் கார்டன் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள மணியை, அடித்து முதல் நாள் ஆட்டத்தை துவக்கி வைத்தார்.
‘மைக்’ பிடித்தார் நெஹ்ரா
இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, சமீபத்தில் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து, நேற்றைய ஆட்டத்தில் வர்ணனையாளர் அவதாரம் எடுத்தார். சக முன்னாள் வீரரான சேவக்குடன் இணைந்து போட்டியை இந்தியில் வர்ணனை செய்தார்.
லக்மல் அசத்தல்
நேற்றைய ஆட்டத்தில் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லக்மல் துல்லியமாக பந்துவீசினார். இவர் வீசிய 6 ஓவரும் ‘மெய்டனாக’ அமைந்தது. தவிர, 3 விக்கெட் வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி தந்தார்.
ஆறாவது வீரர்
டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த 6வது இந்திய வீரரானார் லோகேஷ் ராகுல். கடைசியாக, 2007ல் சிட்டகாங்கில் நடந்த டெஸ்டில் வாசிம் ஜாபர் (எதிர்– வங்கதேசம்) இப்படி ஆட்டமிழந்திருந்தார்.
கோல்கட்டா மண்ணில் சுதிர் நாயக் (1974), கவாஸ்கருக்கு (1984) பின், முதல் பந்தில் அவுட்டான மூன்றாவது இந்திய வீரர் ஆனார் ராகுல்.