”இப்போது கூகிள் படங்கள் தேடலுக்கு உடனடியாக செல்லுங்கள். அதில் அழகான பெண் என தேடுங்கள்” என்றார் புகைப்படவியலாளர் மைஹேலா நொரொக்.
அவர் சொன்னதை நான் செய்தேன். பத்து லட்சத்துக்கும் அதிகமான முடிவுகள் வந்து விழுந்தன.
” அங்கே என்ன பார்க்கிறாய்? மிகவும் பாலியல் ரீதியாக கவர்ச்சியூட்டும் புகைப்படங்கள் தானே? நான் சொல்வது சரியா” எனஅவள் கேட்டாள்.
ஆம். தேடலில் முதலில் கிடைத்த படங்களில், பல பெண்கள் குதிகாலை உயர்த்தும் காலணிகள் அணிந்திருந்தனர். மேலும் இளமையான ஒல்லியான பொன்னிற கூந்தலுடன், பூரண தோலுடன் உடல் அச்சுக்குள் பொருந்தும் வண்ணம் உடைகளை வெளிப்படுத்தும் பெண்களின் படங்களாக இருந்தன.
” ஆகவே அழகு என்பது எப்போதுமே இப்படித்தான் பார்க்கப்படுகிறதல்லவா. பெண்களை காட்சிப்படுத்தி, அவர்களை மிகவும் பாலியல் ரீதியிலான கவர்ச்சிப் பொருளாக்கினால்தான் அழகு என்பது ஏற்கப்படுகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்கிறார் மைஹேலா .
” பெண்கள் அப்படியானவர்கள் அல்ல. நம்மிடம் நமது கதைகள் இருக்கின்றன, நமது போராட்டங்கள், நமது சக்தி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பிரதிநிதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் நம் பிரதிபலிப்பைத்தான் கூகிள் வெளியிடுகிறது. இது போன்ற புகைப்படங்கள் தேடலில் முதலில் வருவதற்கு நாம் அனைவருமே குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தியிருக்கிறோம்” என்கிறார் மைஹேலா.
மைஹேலா மிகச் சமீபத்தில் அவரது முதல் புகைப்பட புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். ‘அட்லஸ் ஆஃப் பியூட்டி’ என்ற பெயரிலான அப்புத்தகம் 500 பெண்களின் உருவப்படங்களை உள்ளடக்கியிருக்கிறது.
பல்வேறு வயது, தொழில் மற்றும் பின்னணியில் உள்ள பெண்கள் இந்த புகைப்படங்களில் உள்ளனர். ”மக்கள் எனது படங்களை விரும்புகிறார்கள் ஏனெனில் அவர்கள் நம்மைச்சுற்றி உள்ளவர்களையே, தெருக்களில் நம்மைச்சுற்றியுள்ள மக்களையே சித்தரிக்கிறார்கள்” என நொரொக் விளக்குகிறார்.
”என்னுடைய படங்கள் இயல்பாகவும் எளிமையாகவும் இருக்கின்றன. இவை ஆச்சர்யமாகவும் இருக்கலாம் ஏனெனில் வழக்கமாக நாம் இதுபோன்ற புகைப்படங்களை அழகுக்கான புகைப்படமாக பார்த்திருக்கமாட்டோம்” என்றார் அந்த பெண் புகைப்படவியலாளர்.
அந்தப் புத்தகத்தில் உள்ள 500 படங்களில் ஒவ்வொன்றுக்கும் அந்த புகைப்படத்தை விவரிக்கும் ஒரு குறிப்பும் இருக்கிறது. அதில் எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட தகவல் உள்ளது.
எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கான தகவல் ஒவ்வொரு புகைப்படத்திலும் மாறுபடும். நேபால், திபெத், எத்தியோப்பியா, இத்தாலி, மியான்மர், வட கொரியா, ஜெர்மனி, மெக்சிகோ, இந்தியா, ஆப்கானிஸ்தான், பிரிட்டன், அமெரிக்கா, அமேசான் மழைக்காடுகள் என பல்வேறு இடங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
சில இடங்கள் மற்ற இடங்களை விட பிரச்னைக்குரியவை என்பது நிரூபணமானது.
” நான் தெருக்களில் பெண்களை புகைப்படம் எடுக்க அணுகினேன். என்னுடைய திட்டம் குறித்து அவர்களிடம் விளக்கினேன். சில நேரங்களில் எனக்கு ‘எடுக்கலாம்’ என்ற பதில் கிடைக்கும். சில சமயங்களில் எனக்கு ‘இல்லை’ என்ற பதிலே கிடைக்கும். அந்த பதிலானது எந்த நாட்டில் நான் நின்றுகொண்டு கேட்கிறேன் என்பதைப் பொறுத்து மாறுபடும்” என அவர் விவரித்தார்.
” மிகவும் பழைமைவாத சமூகத்திடம் நாம் செல்லும்போது சில விஷயங்களை நாம் கவனிக்க முடியும். அந்தப் பெண்ணுக்கு சமூகத்திடம் இருந்து சில குறிப்பிட்ட வகையில் அதிக அழுத்தம் இருக்கும் மேலும் அவளது தினசரி வாழ்க்கை வேறு சிலரால் மிககவனமாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.அதனால் அவள் எளிதில் புகைப்படம் எடுக்க சம்மதிக்க மாட்டார். அவள் ஒருவேளை அவளது குடும்பத்தில் உள்ள ஆண்களிடம் சம்மதம் பெற வேண்டியதிருக்கலாம்.
உலகின் மற்ற சில பகுதிகளில் அவர்கள் அதீத கவனமாக இருக்கிறார்கள் ஏனெனில் அங்கே கொலம்பியாவைப் போல பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகள் இருக்கலாம். ஏனெனில் கொலம்பியாவில் பாப்லோ எஸ்கோபர் மற்றும் அவரது மாஃபியாவால் பிரச்சனைகள் பல ஆண்டுகளாக நீடித்தது.” என்றார் நொரொக்.
”இதே புகைப்படம் எடுக்கும் திட்டத்தை ஆண்களுக்காக யாராவது துவங்கியிருந்தால் அது மிகவும் எளிதாக இருந்திருக்கும். ஏனெனில் ஆண்கள் அவர்களது மனைவியிடமோ, சகோதரிகளிடமோ, அன்னையிடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை” என அடுக்குகிறார் அந்த புகைப்படவியலாளர்.
தான் எப்போதாவது தனது படங்களை போட்டோஷாப்பில் பயன்படுத்துவதாகவும் ஆனால் அது நீங்கள் நினைக்கும் காரணங்களுக்காக அல்ல என்கிறார் மைஹேலா.
”நீங்கள் புகைப்படம் எடுக்கும்போது அது மூல படமாக இருக்கும். அதாவது நிஜத்தில் நாம் பார்க்கும் வண்ணங்கள் அதில் இருக்காது. ஆகவே, நான் அவற்றை நிஜ இடத்தில் இருந்ததுபோல துடிப்பானதாகவும், வண்ணமயமாகவும் மாற்றுவதற்காக அந்த புகைப்படங்களில் திருத்தங்கள் மேற்கொள்வேன். ஆனால் யாரையாவது மெலிதாக காட்டுவதற்காகவோ அல்லது அதுபோன்ற ஏதேனும் விஷயங்களுக்காக எப்போதும் பயன்படுத்தமாட்டேன். ஏனெனில் அவை வலி மிகுந்தது”.
” ஏனெனில் நானும் ஒரு பெண்ணாக வளர்வதிலுள்ள அனைத்து கடினமான விஷயங்களையும் அனுபவித்து வளர்ந்தேன். நான் ஏதாவதொரு வகையில் மெலிதான உடல்வாகு கொண்டவளாக தோற்றமளிக்க வேண்டுமென விரும்பினேன். அது நான் தினசரி வாழ்வில் பார்த்த போலியான புகைப்படங்களின் தாக்கத்துடன் தொடர்புடையது” எனச் சொல்கிறார் மைஹேலா .
கடந்த 2015 ஆம் ஆண்டு கிம் கர்தாஷியன் வெளியிட்ட செல்பி புத்தகங்களில் இருந்து மைஹேலாவின் புகைப்பட புத்தகம் முற்றிலும் மாறுபட்டது. ”இந்நாட்களில் நமது உலகின் மிகப்பிரபலமான பதிவர்கள் சாதிக்க கடினமான போலியான அழகு தர நிர்ணயம் செய்கிறார்கள் செய்கிறார்கள். ஒரு பெண்ணாக அதனை தங்களுடன் தொடர்புபடுத்தி பார்ப்பது கடினமாக இருக்கிறது .
கிம் கர்தாஷியனுக்கு பத்து கோடி பின்தொடர்பாளர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கிறார்கள். எனக்கு இரண்டு லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ஆகவே வித்தியாசத்தை கற்பனை செய்து பாருங்கள். அது ஆச்சர்யமானது. ஆனால் மெல்ல மெல்ல இயல்பான மற்றும் எளிமையான அழகு என்பது உலகம் முழுவதும் பரவும் என நினைக்கிறேன்” என்றார் புகைப்படவியலாளர் மைஹேலா.
ஆகவே புகைப்படவியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மைஹேலா கொடுக்கும் ஆகச்சிறந்த ஆலோசனை என்னவாக இருக்கும்? நல்ல தரமான கேமராவை வாங்க வேண்டுமா? கண்ணாடி வில்லை மற்றும் கோணங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமா ?
இல்லை
” நல்ல ஷூ ஒன்றை வாங்குங்கள்” எனச் சொல்லி விட்டு சிரிக்கிறார்.
”ஏனெனில் நீங்கள் நிறைய நடக்க வேண்டும் நிறைய விஷயங்களை ஆராய வேண்டும்” என்கிறார் மைஹேலா நொரொக்.