நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி உரிமையைப் பெற்றுக் கொடுப்பது சர்வதேச சமவாயங்களுக்கு அமைவாக மட்டுமன்றி அரசியலமைப்புக்கேற்பவும் அனைத்து அரசாங்கங்கங்ளினதும் கடமையாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று (15) முற்பகல் கண்டி புஷ்பதான மகளிர் கல்லூரியின 25 ஆவது ஆண்டு நி;றைவு விழா மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்களுக்கு கல்லூரி மாணவிகளால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரியில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளுக்கு ஜனாதிபதி அவர்களினால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
கல்லூரியின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட நினைவு முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், மத்திய மாகாண பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்கவினால் அது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் ஈ டபிள்யூ எல் கே எகொடவெலவினால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கிவைக்கப்பட்டது.
இன்று நகரங்களில் பிரதான பாடசாலைகளுக்கு இருந்துவரும் போட்டி காரணமாக கொழும்பு நகரத்தில் வாழும் குறைந்த வசதிகளையுடைய குடும்பங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான பிள்ளைகளுக்கு தமக்கு அருகில் உள்ள பாடசாலைகளுக்கு அனுமதி பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான பௌதீக மற்றும் மனித வளங்களைக் குறைவின்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது பிரதான பாடசாலைகளுக்கு இருந்துவரும் போட்டித்தன்மையைக் குறைத்து அனைத்து பிள்ளைகளுக்கும் தடையின்றி கல்வி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காகவேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கல்வித்துறையில் போட்டித் தன்மை காரணமாக ஏற்பட்டிருக்கும் இந்த நிலை விரைவில் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பரீட்சையில்; சித்தியடைவது போன்று சமூகத்திலுள்ள சவால்களையம் தடைகளையும் புரிந்துகொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்க்கைக்கு முகங்கொடுத்து வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கு மாணவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்றைய தினம் செய்திப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் 10 வயது பாடசாலை மாணவி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வை நினைவுபடுத்திய ஜனாதிபதி, இன்று இலங்கை தற்கொலை செய்து கொள்வதில் முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், இந்த மோசமான நிலமையிலிருந்து சமூகத்தை மீட்பது குறித்து பொறுப்புவாய்ந்த அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண அமைச்சர் திலின பண்டார தென்னகோன், கண்டி மாவட்ட செயலாளர் எச் எம் பி ஹிட்டிசேக்கர ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.