நாட்டின் இராணுவ தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 1996ம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவகச்சேரி நாவற்குழி பகுதியில் வைத்து, அப்போதைய நாவற்குழி இராணுவ முகாம் தளபதியான துமிந்த கெப்டி வெலான கைது செய்து சென்ற நபர்கள் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறு கோரியும் அவர்களது உறவினர்களால் மூன்று ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாவற்குழி இராணுவ முகாம் தளபதி துமிந்த கெப்டி வெலாவன முதலாம் எதிரியாகவும், இரண்டாம் எதிரியாக இராணுவ தளபதியும், மூன்றாம் எதிரியாக சட்டமா அதிபரும் பெயர் குறிப்பிடப்பட்டு இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனு தொடர்பான விசாரனையானது இன்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் இடம்பெற்றபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தற்போதைய இராணுவ தளபதியை எதிர்வரும் ஆண்டு ஜனவரி 18ம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.