உள்ளுராட்சி சபைகள் அமைச்சரினால் அமைக்கப்பட்ட உள்ளுராட்சி எல்லை நிர்ணய குழுவின் அறிக்கைக்கு ஏற்ப வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறும், இந்த அறிக்கையின் பிரகாரம் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதை நிறுத்துமாறும் கோரி நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை இன்றும் (16) நடைபெறவுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை முடியும் வரையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதை நிறுத்துமாறு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.
கண்டி விலியம் கோபல்லாவ மாவத்தையைச் சேர்ந்த டபிள்யு. டீ.ஜீ. விஜேரத்ன உட்பட ஆறு பேர்கொண்ட குழுவினால் இந்த மனு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட மனு மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவினால் நேற்று(15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பிலான விசாரணை இன்றும் (16) நடைபெறவுள்ளது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அர்ஜுன் ஒபேசேகர, சட்ட மா அதிபர் சார்பாக இந்த வழக்கில் ஆஜராகியுள்ளார். இது தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இன்று (16) அறிவிப்பதாகவும் அவர் நீதிமன்றத்திடம் கூறியுள்ளார்.