‘‘தோனியை சுற்றி பொறாமை பிடித்த மனிதர்கள் உள்ளனர். இவரின் கிரிக்கெட் வாழ்க்கை எப்போதும் முடியும் என காத்திருக்கின்றனர்,’’ என, இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
இந்திய அணி ‘சீனியர்’ வீரர் தோனி, 36. ஐ.சி.சி., நடத்தும் மூன்றுவிதமான உலக கோப்பை வென்று தந்தாலும், சமீப காலமாக ‘டுவென்டி–20’ போட்டியில் ரன் சேர்க்க தடுமாறுகிறார். இதனால், இவரை ‘டுவென்டி–20’ போட்டியிலிருந்து ஓய்வு பெற முன்னாள் வீரர்கள் சிலர் வற்புறுத்துகின்றனர். இந்திய அணி கேப்டன் கோஹ்லி, தோனிக்கு முழு ஆதரவு தந்துள்ளார்.
இது குறித்து ரவி சாஸ்திரி கூறியது: தோனியை சுற்றி பொறாமை பிடித்த பல மனிதர்கள் உள்ளனர். இவரின் கிரிக்கெட் வாழ்க்கை எப்போதும் முடியும் என காத்திருக்கின்றனர். ஆனால், அணியுடன் எந்த அளவில் தோனி இருக்கிறார் என எங்களுக்குத்தெரியும். மிகச்சிறந்த கேப்டனாக திகழ்ந்த இவர், தற்போது அணியின் திறமையான வீரராகவும் உள்ளார். ‘சூப்பர் ஸ்டார்’ போல இருப்பதால், அடிக்கடி இவரை பற்றி பேசுகின்றனர். இதன்படிதான், ‘டிவி’ விவாதத்தில் சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நான் கூட இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். இதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. தனது எதிர்காலம் குறித்து தோனிதான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.