கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்ற அரச நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளும் சேவைகளுக்கான கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. கடந்த மூன்று வருடங்களில் திருத்தப்படாத கட்டணங்களே இவ்வாறு அதிகரிக்கப்படவிருப்பதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அரசாங்க நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற சேவைகளுக்கான கட்டணங்கள் பல வருடங்களாக மறுசீரமைக்கப்படால் இருக்கின்றன. மூன்று வருடங்கள் மறுசீரமைக்கப்படாத கட்டணங்களே 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. உதாரணமாக கடவுச்சீட்டு, அடையாள அட்டைகளுக்கான கட்டணங்கள், மிருகக்காட்சி சாலை நுழைவுச்சீட்டுக் கட்டணம், உயிரியல் பூங்காக்களின் கட்டணம், நீதிமன்ற சேவைக் கட்டணம், தபால் கட்டணம் உள்ளிட்டவற்றில் மாற்றஞ்செய்யப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அதேநேரம், வங்கிக் கொடுக்கல் வாங்கல்களில் ஒவ்வொரு 1000 ரூபாவுக்கும் 20 சதம் விசேட வரி அறவிடப்படவுள்ளது. கடன்களை மீளச் செலுத்தும் நோக்கில் அறவிடப்படும் இந்தவரியானது வங்கிகளினால் வாடிக்கையாளர் மீது சுமத்த முடியாது. இதனை மீளப்பெறக்கூடிய செலவீனமாக வங்கிகள் பேணமுடியும் என்றும் கூறினார்.
இலத்திரனியல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள அதேநேரம், வாகன இறக்குமதியில் காணப்படும் சிக்கலான வரி முறையை இலகுபடுத்தி, வாகனங்களின் இயந்திரக் கொள்ளளவுக்கு அமைய வரிச் சூத்திரமொன்று நடைமுறைப்படுத்தப்படும். இதனூடாக இறக்குமதியாளர் ஒருவர் தான் செலுத்தவேண்டிய வரி குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். புதிய இலத்திரனியல் வாகனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளபோதும், பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் வாகனங்களுக்கான வரிச் சலுகை குறித்து கவனத்தில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, பழைய வாகனங்களுக்கான கார்பன் வரி அறவீடானது இயந்திர கொள்ளளவுக்கு அமைய மேற்கொள்ளப்படுவது நியாயமற்றது என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். எனினும், வாகனங்களின் பயன்பாடுகளை அளவிடுவதற்கான பொறிமுறையொன்று இல்லையென்பதால், இயந்திரக் கொள்ளளவுக்கு அமைய வரி அறவிடப்படுவதுடன், படிப்படியாக பயன்பாட்டுக்கான வரியை அறவிட எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.