பொறாமைகொண்ட சிலர், தோனியின் கிரிக்கெட் கரியரை முடிவுக்குக் கொண்டுவர எண்ணுவதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, டெஸ்ட் போட்டிகளுக்கு குட்பை சொல்லிவிட்டு, லிமிடெட் ஓவர் போட்டிகளில் மட்டும் தற்போது கவனம்செலுத்தி வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகிய அவர், விராட் கோலி தலைமையில் விளையாடிவருகிறார். சமீபத்தில் நடந்த நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில், தோனி மெதுவாக ரன் சேர்த்ததாக அவர்மீது விமர்சனம் எழுந்தது. ‘தோனி, இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்’ என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்களான அஜித் அகார்கர் மற்றும் வி.வி.எஸ். லட்சுமணன் உள்ளிட்டோர் விமர்சனம் செய்திருந்தனர். ஆனால், தோனிக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், கேப்டன் விராட் கோலியும், சமீபத்தில் ஓய்வுபெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசியுள்ள ரவி சாஸ்திரி, ‘சில போட்டிகளில் தோனி சரியாக விளையாடவில்லை என்பதைக் காரணம்காட்டி பொறாமைகொண்ட சிலர், அவரது சர்வதேச கிரிக்கெட் கேரியருக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்கள். ஆனால், அவரைப் போன்ற சிறந்த வீரர்கள், தங்களின் எதிர்காலத்தை அவர்களே முடிவுசெய்வார்கள். தோனியின் மதிப்பை இந்திய அணி நிர்வாகமும், வீரர்களுக்கு நன்றாக அறிவார்கள். இதுபோன்ற விமர்சனங்கள், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவரை எந்த விதத்திலும் பாதிக்காது. அவர், சிறந்த தலைமைப் பண்பு கொண்டவர். தற்போது, அணியின் வெற்றிக்கு ஒரு வீரராக சிறப்பான பங்களிப்பை அளித்துவருகிறார்’ என்று பேசியுள்ளார்.