ஜெய்ப்பூரில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரில் ரன் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 15 வயது ராஜஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளார் ஆகாஷ் சவுத்ரி ஒருநாள் இந்திய அணிக்காக ஆடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தி இந்துவுக்கு அவர் கூறியதாவது: “நான் ராஜஸ்தானுக்கு முதலில் ஆடுவேன், பிறகு இந்திய அணியில் ஒருநாள் இடம்பிடிப்பேன். இதுதான் இலக்கு.” என்றார்.
ஆகாஷ் சவுத்ரி முன்னாள் ராஜஸ்தான் ரஞ்சி வீரர் விவேக் யாதவ்விடம் பயிற்சி பெற்று வருகிறார். பயிற்சியாளரும் ஆகாஷின் திறமையை விதந்தோதினார்.
தனது சாதனை குறித்து ஆகாஷ் சவுத்ரி கூறும்போது, “அது அவ்வாறு நிகழ்ந்தது அவ்வளவுதான். எப்படி என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.
எந்த ஒரு வடிவத்திலும் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது சாதாரணமான சாதனையல்ல, அதுவும் டி20 கிரிக்கெட் முழுக்க முழுக்க பேட்டிங் ஆதிக்க வடிவம், இதில் 10 விக்கெட்டுகளை ரன் கொடுக்காமல் எடுத்திருப்பது உண்மையில் திகைக்க வைக்கும் இளம் திறமையே.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சு 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் கைப்பற்றியதே. டெஸ்ட் போட்டிகளில் ஜிம் லேக்கர், அனில் கும்ப்ளே மட்டும்தான் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.