சவூதி அரேபிய அதிகாரபீடத்தின் சமீபத்தியக் கருத்துக்களும் , அறிக்கைகளும் புதிர் நிறைந்ததொரு சமச்சாரமாக மாறியிருக்கிறது. முடிக்குரிய இளவரசர் முஹம்மத் இப்னு ஸல்மான் ‘எஞ்சியிருக்கும் தீவிரவாத படிமங்களை கிட்டிய விரைவில் நாட்டிலிருந்து விரட்டியப்போம்’ என கடந்த வாரம் பொருளாதார அபிவிருக்தி மாநாடொன்றில் கூறியிருக்கிறார். சவூதி அரேபியாவின் வெளிநாட்டமைச்சர் ஆதில் ஜூபைர் ‘தீவிரவாதத்தை ஒழிக்கும் முகமாக சவூதி அரேபிய மஸ்ஜிதுகளில் பணியாற்றிய ஆயிரக் கணக்கான இமாம்களை நீக்கியுள்ளோம்’ என ரஷ்ய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். கடந்த வாரம் தீவிரவாதம் மற்றும் கடும்போக்குச் சிந்தனைகளுக்கு ஊடகமாக பயன்படுத்திக் கொள்ளப்படும் ஹதீஸ்களை பகுப்பாய்வு செய்யும் நோக்கில் ‘மன்னர் ஸல்மான் ஹதீஸ் கலை ஆய்வகம் திறக்கப்படும்’ என அரச பிரகடனம் வெளியிடப்பட்டது. மறுபுறம், பலவருட காலம் அமுலில் இருந்த பெண் வாகனம் ஓட்டுதவற்கான தடைச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இத்தணைக்கும் முத்தாய்ப்பு வைத்தாற் போல் ‘நடுநிலை இஸ்லாத்தை அறிமுகம் செய்யப்போகிறோம்’ என இளவரசர் முஹம்மத் இப்னு ஸல்மான் கூறியிருக்கிறார். இன்னும், ‘முழு உலகுடனும் உறவாடும் திறந்த சமூகமாக சவூதி அரேபியாவை மாற்றப்போகிறோம்’ என்பதும் அண்மையில் அவர் கூறியதொரு கருத்தாகும். இதனோடிணைந்த வகையில், இதுவரை காலமும் பேணப்பட்ட எல்லைக் கோடுகளைத் தாண்டிய நிலையில் கொண்டாடப்பட்ட கவர்ச்சிகரமான தேசிய தினக் கொண்டாட்டங்கள் அனைத்தும் புதிய இளவரசின் அரசியல் கனவுகளும் , திசைவழியும் என்ன? என்ற விவாதத்தை தோற்றுவித்துள்ளது.
பின் ஸல்மானின் ‘2030 விஷன்’ செயற்திட்டம்
இளவரசர் முஹம்மத் இப்னு ஸல்மானின் கருத்துகளையும் , நிலைப்பாடுகளையும் புரிந்து கொள்வதற்கு அவரது ‘2030 ஆம் ஆண்டினை நோக்கிய விஷனை’ப் புரிந்த கொள்வது அடிப்படையானது. ஏனெனில், தனது கனவு தேசத்தின் அடையாளங்களையும் , அபிலாஷைகளையும் அவர் அதில் வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த ஜந்தாண்டு காலமாக ரியாத் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. காரணம், திடீரென சர்வதேச சந்தையில் எண்ணை விலை குறைந்ததன் தாக்கமும் , அதிர்வுகளும் சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தை ஒரு கனம் ஸ்தம்பிக்கச் செய்து விட்டன. எனவே, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்குமொரு தேசத்தையே மன்னர் ஸல்மானும் , முடிக்குரிய இளவரசனுமாகிய முஹம்மத் இப்னு ஸல்மானும் கைவரப் பெற்றிருக்கிறார்கள். இத்தகைய நெருக்கடி நிலையிலிருந்து பொருளதாரத்தை தூக்கி நிறுத்தும் நோக்கத்திலேயே ‘விஷன் 2030’ வரையப்பட்டதாக கூறப்படுகிறது. இப்புதிய செயற்திட்டத்தின் மையத் தத்துவம் யாதெனில், எண்ணை வருமானத்தின் மீது குவிந்திருக்கும் சவூதியின் பொருளாதார ஒழுங்கை உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதாகும். இந்தப் பின்புலத்தில், ‘சர்வதேச முதலீடுகளின் மையமாக சவூதியை மாற்றியமைத்தல்’ பிரதான இலக்காக விஷன் 2030 குறிப்பிடுகிறது. அடுத்து, ஆசியா , ஆபிரிக்கா , ஜரோப்பியக் கண்டங்களுடன் நெருங்கிய உறவுகளை கட்டியெழுப்புதல் இடம்பெற்றுள்ளன. மேற்சொன்ன இலக்குகளை அடையும் வகையில் சவூதி அரேபிய சிவில் சமூகத்தை சுறுசுறுப்பானதாக மாற்றியமைக்கும் செயற்திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. அதில், பாரம்பரிய மரபுரிமைகளை பாதுகாத்தல் மற்றும் நூதனசாலைகள் அபிவிருக்தி செயற்திட்டங்களும் , உலகில் முதல் தர நகரங்களாக சவூதி அரேபிய நகரங்களை மாற்றியமைப்பதற்கான பாரிய கட்டமைப்பு மாற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தொழிபதிபர்களை உருவாக்குதல் , நாட்டின் தொழிற்சந்தை விரிவுபடுத்தல் , புதிய தொழல்களை உருவாக்குதல் மற்றும் நாட்டில் கலை, கலாசார துறைகளில் மக்கள் செலவீனத்தை அதிகரிக்கச் செய்தல் போன்றனவும் உள்ளடங்குகின்றன.
புதிய விஷன் 2030 பின்புலத்தில் தொழிற்படும் அரசியல் பின்னணி என்ன? என்ற கேள்வியும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இது பற்றி இரு விதமான கோணங்களில் பகுப்பாய்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. முதலாவது, இதுவரை இறுக்கமான மதக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சவூதி அரேபிய சிவில் சமூகத்தை ஏனைய சர்வதேச சிவில் சமூகங்களைப் போன்று சாதாரண சமூக இயல்புகளுடன் வாழும் சூழலை ஏற்படுத்துவதே அதன் நோக்கமாகும் என சில அரசியல் நோக்கர்கள் விவாதிக்கிறார்கள். அதாவது, கலை , கலசாரம் , விளையாட்டு மற்றும் சர்வதேச உலகுடன் இணைந்து செல்லும் சுற்றுலாத் துறை என்ற சாதாரண இயல்புகளுடன் கூடியதொரு வெளியை சவூதி அரேபியாவில் உருவாக்கும் வேலைத்திட்டமே முஹம்மத் பின் ஸல்மானுடைய ‘2030 விஷன்’ என அவர்கள் மேலும் விளக்குகிறார்கள். எனவே, இத்திட்டத்தை சாதகமானதொரு பிரயத்தனமாகவே நோக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். மறுபுறம், ரியாத் முகம்கொடுக்கும் பொருளாதார நெருக்கடி நிலையின் விளைவாக எதிர்பார்க்கப்படும் மக்கள் எதிர்ப்பலையை சமாளிப்பதற்கான வியூகமாகவே இது விளங்கப்பட வேண்டும் என்பது மற்றொரு சாராரின் கருத்தாகும். அதேபோன்று, சவூதியின் மன்னராட்சி மூன்றாம் பரம்பரைக்கு கடத்தப்படப் போகும் இத்தருணத்தில், அதன் அதிகார அலகுகளை கவனமாக மன்னர் ஸல்மானின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான கவனமாக முன்னெடுப்பாகவும் சிலர் எழுதிச் செல்கிறார்கள். இவையணைத்தையும் தொகுத்து நோக்கும் போது, முஹம்மத் இப்னு ஸல்மானின் நகர்வுகளை மேற்சொன்ன மூன்று பின்னணிகளினதும் ஒட்டுமொத்த சாராம்சமாகவே நோக்கப்பட முடியும். ஏனெனில் , சவூதி அரேபியாவின் ஆட்சிக் கட்டமைப்பில் முஹம்மத் இப்னு ஸல்மான் மேற்கொண்டு வரும் அவசரமான மாற்றங்களையும் , அறிக்கைகளையும் அவதானிக்கும் போது, மேற்கூறப்பட்ட மூன்று பின்புலங்களினதும் பரிமாணங்கள் வித்தியாசமான விகிதத்தில் துலங்குவதனை கண்டு கொள்ள முடியும்.
சவூதியின் ஆட்சிக் கட்டமைப்பும் , சீர்திருத்தங்களும் :
சவூதியின் ஆட்சிப் பொறிமுறையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் பின்புலத்தில் முஹம்மத் இப்னு ஸல்மானின் வியூகங்களே தொழிற்படுகின்றன. குறிப்பாக, சவூதி அரேபியாவை திறந்த சமூகமாக மாற்றியமைக்கும் செயற்திட்டத்தில் அங்கு செல்வாக்குச் செலுத்தும் வஹ்ஹாபிஸ உலமாக்கள் கட்டமைப்பை கட்டுப்படுத்துவதும் அல்லது நெறிப்படுத்துவதும் பிரதானமானது. ஏனெனில், சவூதி அரேபியாவின் இறுக்கமான சட்டங்கள் மற்றும் அதன் அமுலாக்கத்தின் பின்னால் இத்தகைய உலமாக்களின் விளக்கங்களும் , செல்வாக்கும் நியாயமாக பங்களித்துள்ளன. எனவே, அவர்களது ஆதரவை பொதுத்தளத்தில் குறைப்பதினுடாக தனது எதிர்கால இலக்குகளை நோக்கி மெல்ல நகர முடியும் என்பது முஹம்மத் இப்னு ஸல்மானின் புரிதலாகும். அந்த வகையிலேயே, சவூதியின் உயர் உலமாக்கள் சபைக்கு புதிதாக ஷெயக் ஸூலைமான் அபூஹியல் , ஷெய்க் முஹம்மத் ஈஸா , ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமி மற்றும் ஷெய்ஹ் ஜீப்ரீல் அல் பஸலி போன்றவர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் முஹம்மத் அல்ஈஸா என்பவர் ஏற்கனவே நீதி அமைச்சராக இருக்கும் போது , பெண்கள் வழக்கறிஞர்களாக தொழில் செய்வதற்கு அனுமதியளித்தவராகும். அதேபோன்று, சவூதி அரேபிய அரசுக்கு எதிராக எந்த விமர்சனத்தையும் கடுமையாக எதிர்கொள்பவராகவே ஸூலைமான் அபூஹியல் அறியப்படுகிறார். இக்கட்டமைப்பு சீர்திருத்தம் உயர் உலமாக்கள் சபையின் தெரிவுகளிலும் , அதிகாரத்திலும் நியாயமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவானதாகும். மட்டுமன்றி, இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட முதவ்வா முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உதாரணமாக, அவர்களது வேலை நேரம் மற்றும் அதிகாரத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது சவூதியின் மதக் கட்டமைப்பு மற்றும் அமுலாக்கத்துடன் தொடர்புட்ட சீர்திருத்தகளில் சிலவாகும். சமீபத்தில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு கிடைத்த அனுமதி மற்றும் சவூதிஅரேபியாவின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு முரணான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள சர்வதேச உலமாக்களை நேரடியாக எதிர்க்கும் சவூதி உலமாக்களது கருத்துக்களை இந்தப் பின்னணியிலேயே மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
இரண்டாவது, நாட்டின் உயர் அதிகார அலகுகளை பங்கிட்டுக் கொள்வதில் முஹம்மத் இப்னு ஸல்மான் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களைத் தொட்டுக் காட்ட முடியும். மிகப் பெரும்பாலும் அரச குடும்பத்திற்கு வெளியே இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. ஆனால், இந்த விடயத்தில் முஹம்மத் இப்னு ஸல்மானின் அணுகுமுறைகள் அரச குடும்பத்தின் பாரம்பரிய வழக்காறுகளுக்கு முரணானவை. அதாவது, அரச பரம்பரைக்கு வெளியே உள்ள துறைசார்ந்தவர்களை தெரிவு செய்து உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமையாகும். இதனை சிலர் சாதகமாக நோக்கும் அதே வேளை , ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கு மத்தியில் அதிகாரங்கள் குவியாத வகையில் முஹம்மத் பின் ஸல்மானின் கவனமாக காய்நகர்த்தல் என வேறு சில அரசியல் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். உதாரணமாக, தற்போதைய வெளிநாட்டமைச்சர் ஆதில் அல் ஜூபைர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. அதேபோன்று, நாட்டின் பொருளாதார விவகாரங்களை முகாமை செய்வதற்கான நிறுவனங்களில் பொருளியளாளர்களான அஹ்மத் உகைல் அல்ஹதீப் , பாலிஹ் அலி மற்றும் யாசீர் ரம்யான் போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் எவரும் அரச பரம்பரைக்கு உட்பட்டவர்கள் அல்ல. நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த பொறுப்புகளும் அரச மாளிகைக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. உதாரணமாக, முஹம்மத் இப்னு ஸல்மானுக்கு மிக நெருக்கமான அஹ்மத் அல்அஸீரி இராணுவ கட்டமைப்பின் பிரதான பொறுப்பாளராக அமர்த்தப்பட்டிருக்கிறார். மேலும், நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆணையகம் முஹம்மத் அல் அபீலியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய ஊடகத் துறையின் முகாமையாளராக முஹம்மத் இப்னு ஸல்மானின் நண்பர் ஸஊத் அல் கஹ்தானி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய நியமனங்கள் அனைத்தையும் தேசிய அதிகார அலகுகளை அரச குடும்பத்திற்கு வெளியே தனக்கு விசுவாசமானவர்களிடம் நகர்த்திச் செல்லும் இளவரசன் பின் ஸல்மானின் வியூகமாகவே பலரும் நோக்குகின்றனர்.
இதற்கு மேலதிகமாக, மன்னர் ஸல்மானின் நேரடி குடும்ப அங்கத்தவர்களை உயர் பதவிகளில் அமர்த்துவதிலும் முஹம்மத் பின் ஸல்மான் முனைப்பாக இயங்குகிறார். உதாரணமாக, பைசல் பின் ஸல்மான் மதீனா நகரத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு செயற்திட்டங்கள் துர்க் பின் ஸல்மானின் கண்காணிப்பில் இருக்கிறது. நாட்டின் சக்திவள அமைச்சுப் பதவியை அப்துல் அஸீஸ் பின் ஸல்மான் கொண்டிருக்கிறார். வொஷிங்டனுக்கான சவூதி அரேபிய தூதுவராக ஹாலித் இப்னு ஸல்மான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இவர்கள் அனைவரும் மன்னர் ஸல்மானுடைய மனைவிமார்களது பிள்ளைகளாகும். எனவே, நாட்டின் அதிகார வலையமைப்பில் தனது நேரடி குடும்பத்தை உள்வாங்குவதற்கான முயற்சியாக இதனைப் புரிந்து கொள்ள முடியும். முஹம்மத் இப்னு ஸல்மானின் புதிய நகர்வுகளுக்கு சவாலாகவும் , தடையாகவும் கருதப்பட்ட இளவரசர் முஹம்மத் இப்னு நாயிப் பதவி நீக்கப்பட்டவுடன் , அந்த சவாலையும் வெற்றிகரமாக முஹம்மத் இப்னு ஸல்மான் கடந்து சென்றிருக்கிறார் எனலாம்.
முஹம்மத் இப்னு ஸல்மானும் , நான்காம் சவூதி அரேபிய தேசமும் :
இவ்வாறு, சவூதி அரேபியாவின் அரசியல் கட்டமைப்பின் பிரதான பகுதிகளான பாரம்பரிய அதிகார அலகுப் பகிர்வு முறை , நிர்வாக ஒழுங்குகள் , மதநிறுவனங்கள் சார்ந்த தீடிர் சீர்திருத்தங்களை இரண்டு கோணங்களில் நோக்க முடியும். ஒன்று, இளவரசன் முஹம்மத் இப்னு ஸல்மான் தனது 2030 இலக்குகளை நோக்கி நகர்வதற்கு அத்தகைய மாற்றங்கள் இன்றியமையாதவை என்பதாகும். ஏனெனில், இதுவரை சவூதி அரேபியா பின்பற்றி வந்த மூடிய கொள்கைகளையும் , அதிகாரப் பகிர்வு முறைகளையும் , நிர்வாக ஒழுங்குகளையும் தொடர்ந்தும் பேணிய நிலையில் , புரட்சிகரமான 2030 விஷன் இலக்குகளை அடையமுடியாது என பின் ஸல்மான் சிந்திக்கிறார். அதேபோன்று, மாறிவரும் உலகப் பொருளாதார ஒழுங்கில் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்கு சவூதி அரேபியாவுக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவு ஒரு முழுமையாக சீர்திருத்தத்தை நோக்கி செல்வதுதான். இந்த நோக்கில் முஹம்மத் இப்னு ஸல்மானுடைய அதிரடி சீர்திருத்தங்களை சரிகாண முடியும். அந்த வகையில் அதுவொது பாராட்டப்பட வேண்டிய முன்னெடுப்பு என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், சவூதி அரேபியாவின் எதிர்கால அரச அதிகாரத்தையும், மக்களது வாழ்க்கை தரவீழ்ச்சியையும் முகாமை செய்வதற்கான இராஜதந்திர கருவியாகவே 2030 இலக்குகளை முஹம்மத் இப்னு ஸல்மான் வரைந்திருக்கிறார் என்று சிலர் வாதிக்கிறார்கள். எனவேதான், புதிய செயற்திட்டம் அறிமுகம் செய்யப்படும் அதே நேரம் பல நூற்றுக் கணக்கான சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதனையும் பலமானதொரு விமர்சனமாகவே நோக்கப்பட வேண்டும்.
இறுதியாக, இத்தணைக்கும் அப்பால், சவூதி அரேபிய வரலாற்றிலேயே துணிச்சலான ஒரு இளவரசர் முஹம்மத் இப்னு ஸல்மான் என்பனை மட்டும் அடித்துச் சொல்ல முடியும். காரணம், இவர் மேற்கொண்டு வரும் தீடீர் மாற்றங்களை பொதுவாகவும் , அதிலும் சவூதியின் ஆட்சிக் கட்டமைப்பில் சென்ஸிடிவிடி கூடிய பகுதிகளான மதக் கட்டமைப்பு , அதிகாரப் பகிர்வு முறையில் நிகழ்த்தப்பட்டு வரும் மாற்றங்களை குறிப்பாகவும் அவதானிக்குமிடத்து , மிகப் பலமான மற்றும் பரபரப்பான ஓரு இளவரசரால் மட்டுமே அதனை மேற்கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வரமுடியும். 2030 ஆம் ஆண்டினை நோக்கிய பின் ஸல்மானின் இலக்குகளை பகுப்பாய்வு செய்யும் போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அதனையே வலியுறுத்துகின்றன. எனவேதான், சவூதி அரேபியாவின் நான்காம் பிரசவமொன்றை நோக்கி நாட்டை அவர் அழைத்துச் செல்கிறார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னரும் சவூதி அரேபியாவை உலகிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தொனிப் பொருளில் பல்வேறு செயற்திட்டங்களை மன்னர்களும் , இளவரசர்களும் செயற்படுத்தினார்கள். ஆனால், உள்ளக அதிகார சமநிலையில் தலைகீழ் மாற்றங்களை செய்யும் அளவுக்கு அவர்களால் முடியவில்லை. இந்த சவாலையும் முஹம்மத் பின் ஸல்மான் தாண்டிச் சென்றிக்கிறார். அதனால், சவூதி அரேபியாவின் உள்ளக சூழலில் அவரது கொள்கைகளுக்கு எதிராக சில சலசலப்பூட்டும் நிகழ்வுகள் நடைபெற்றாலும் கூட, தனக்கேற்ற வகையில் அரசு-சமூக இடையுறவை வடிவமைக்கும் பின்ஸல்மானின் பயணம் தொடரும் என்பதே தற்போதைக்கு ஊகிக்க முடியுமான விடயமாகும்.