“வெளிநாட்டு பால்மா கம்பனிகள், இங்கு ஆக்கிரமிக்க இடமளிக்காது, தேசிய பாற்பண்ணையாளர்களைப் பலப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும், “மக்கள், தேர்தல்களில் வாக்கைப் பயன்படுத்தி செய்ய வேண்டியது, ஊழல் மோசடி இல்லாத மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதாகும். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, தூய அரசியல் இயக்கத்தின் மூலம் தான் முடியும்” எனவும் தெரிவித்தார்.
பொலன்னறுவை அரலங்வில பிரதேசத்தில் நேற்று (05) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“குழந்தைகளுக்கான பால்மாவுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுத்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏனைய பால்மாக்களுக்குக் கட்டுப்பாட்டை விதித்து, தேசிய பாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் பெரும்தொகை நிதி செலவிடப்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உலகின் அபிவிருத்தியடைந்த எந்தவொரு நாடும், வெளிநாட்டுப் பால்மாவை பயன்படுத்துவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
இன்று இலங்கை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் பால்மாவை அதிகம் பயன்படுத்தும் நாடாக மாறியிருப்பதுடன், இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், நாட்டை முன்னெடுத்துச் செல்கின்றபோது ஊழல் மோசடி இல்லாத நேர்மையான அரசியல் முகாம் ஒன்று அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த காலத்தில் இருந்து தமக்கு பலமாக இருந்த கலைஞரான ஜே.ஆர்.குணசேன அவர்களின் பெயரில், இசைக் கருவிகளை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
அத்துடன், திம்புலாகல கல்வி வலயத்தில் 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்ற வெளிக்கந்தை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு, ஜனாதிபதி பரிசில் வழங்கினார்.
மேலும், 183 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெற்ற சர்வதேச கைவினைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற செவனபிட்டிய சமிந்தவுக்கு கிடைத்த விருது, ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேசத்தில் இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதி அமைச்சர்களான அநுராத ஜயரத்ன, லக்ஷ்மன் வசந்த பெரேரா, வடமத்திய மாகாண சபையின் முன்னாள் பிரதித் தலைவர் ஜயந்த மாரசிங்க, மஹிந்த ரத்னாயக ஆகியோர் கலந்துகொண்டனர்.