பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெனியாயவில் நடந்த கூட்டத்தில் இந்த தகவலை வெளியிட்டார்.
“அம்பாந்தோட்டை துறைமுகத்தை இயக்குவதற்கு நிதி இல்லாததால் அதனை மூடுவதற்கு அரசாங்கம் சிந்தித்தது. அப்போது தான், சீன அதிபர், சிறிலங்கா அரசாங்கமும், சீன நிறுவனமும் கூட்டு முயற்சியாக இதனை இயக்கலாம் என்ற யோசனையை முன்வைத்திருந்தார்.
கொழும்பு துறைமுகத்தின் வருமானத்தைப் பயன்படுத்துவதை தவிர வேறு வழி இருக்கவில்லை. இதனால் வேறொரு தெரிவை பற்றி யோசிக்க வேண்டியிருந்தது. அம்பாந்தோட்டை பொருளாதார வலயத்தில் பல முக்கியமான முதலீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
எல்லா தென் மாவட்டங்களுக்கும் மின் விநியோகத்தை மேற்கொள்ளக் கூடிய வகையிலான, இயற்கை எரிவாயு மின் திட்டம், கப்பல் கட்டும் தளம் (dockyard) சுற்றுலா முயற்சிகள் என்பன இங்கு வரவுள்ளன. சூரியவெவ துடுப்பாட்ட மைதானம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2
மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையம், எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெனியாயவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையும், இந்திய நிறுவனம் ஒன்றும் இணைந்து, கூட்டு முயற்சியாக, மத்தல விமான நிலையத்தை இயக்கவுள்ளன. இந்த கூட்டு முயற்சி வரும் மார்ச் மாதம் முதல் செயற்படுத்தப்படும்.
அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற அதே சூழ்நிலையிலேயே மத்தல விமான நிலையமும் உள்ளது, இதனை இலாபமீட்டும் துறையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகாரசபை இருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், மத்தல விமான நிலையத்தை சிறிலங்காவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக இயக்கவுள்ள இந்திய நிறுவனத்தின் பெயரையோ, இது தொடர்பான உடன்பாட்டு விதிமுறைகள் பற்றியோ சிறிலங்கா பிரதமர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.