ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சி பிரிவில் மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ரஞ்சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் மும்பை – ஒடிசா அணிகளுக்கு இடையிலான சி பிரிவு போட்டி புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 289 ரன்களையும், ஒடிசா அணி 145 ரன்களையும் எடுத்தது. இதைத்தொடர்ந்து ஆடிய மும்பை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை எடுத்தது. அந்த அணியைச் சேர்ந்த லாட் 117 ரன்களைக் குவித்தார்.
வெற்றிபெற 413 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த ஒடிசா அணி, 3-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்களை எடுத்திருந்தது. போடார் 48 ரன்களுடனும், சாந்தனு மிஸ்ரா 4 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஆட்டத்தை தொடர்ந்த ஒடிசா அணி 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக போடர் 87 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணியில் ஆகாஷ் பார்க்கர், தவல் குல்கர்ணி ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். ஒடிசாவுக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம், மும்பை அணி இந்த ஆண்டின் ரஞ்சி கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பெற்றது.
கர்நாடகா வெற்றி
புனே நகரில் நடந்த ஏ பிரிவு போட்டியில் கர்நாடகா அணியுடன் மகாராஷ்டிரா அணி மோதியது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மகாராஷ்டிரா அணி 245 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய கர்நாடக அணி, தங்கள் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 628 ரன்களைக் குவித்தது. கர்நாடக அணியில் மயங்க் அகர்வால் மிகச் சிறப்பாக ஆடி 304 ரன்களைக் குவித்தார். அவருக்குத் துணையாக சமர்த் 129 ரன்களையும், கருண் நாயர் 116 ரன்களையும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஆடிய மகாராஷ்டிரா அணி, தங்கள் 2-வது இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து இப்போட்டியில் கர்நாடக அணி ஒரு இன்னிங்ஸ் 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கர்நாடக அணியின் வேகப்பந்து வீச்சாளரான அபிமன்யு மிதுன் 66 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இப்போட்டியின் ஆட்ட நாயகனாக மயங்க் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹைதராபாத் வெற்றி
டெல்லியில் நடந்த மற்றொரு ஏ பிரிவு போட்டியில் ஹைதராபாத் – ரயில்வே அணிகள் மோதின. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி 474 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய ரயில்வே அணி, 246 ரன்களை எடுத்து பாலோ ஆன் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 250 ரன்களை மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து வெற்றிபெற 23 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவ்ந்த ஹைதராபாத் அணி, விக்கெட் இழப்பின்றி அந்த ஸ்கோரை எட்டியது. இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.