மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, சீன அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆண்களுக்கான ஆசிய கோப்பை தொடர் முடிவடைந்ததும், மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் ஆரம்பமானது. ஆண்கள் பிரிவில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதால், அடுத்து தொடங்கிய மகளிர் ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி மீது அனைவரது கவனமும் இருந்தது.
அதற்கு ஏற்ப, இந்திய மகளிர் அணியும் தொடரின் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. முதல் சுற்று போட்டிகளில் எதிலும் தோல்வி அடையாமல், இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் சீன அணியை இன்று எதிர்கொண்டது இந்திய மகளிர் அணி.
துவக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் துவக்கத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. பின்னர் முதலாவது கோலை இந்தியா அடிக்க, அதற்கு சீனாவும் பதில் கோல் அடிக்க போட்டி சமமானது. பின்னர் கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், வெற்றியாளரை தீர்மானிக்கும் ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் தலா நான்கு கோல் அடிக்க ’ஷடன் டெத்’ என்னும் முறைகடைபிடிக்கப்பட்டது.
இறுதியில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டு சீன அணியை 5-4 கோல் கணக்கில் வீழ்த்தி ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 13 வருடங்களுக்கு பிறகு இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது. சமீப காலங்களில் இந்திய மகளிர் அணியின் பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
இது மகளிர் அணிக்கு இரண்டாவது ஆசிய கோப்பையாகும். இதற்கு முன் 2004 -ம் ஆண்டு ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது. இதன் மூலம் அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலககோப்பை தொடரில் இந்திய அணி விளையாட தகுதி பெற்றது. வாழ்த்துக்கள் கேர்ள்ஸ்.