4 நாட்களுக்கு போதுமானளவு எரிபொருள் பெற்றோலிய கூட்டத்தாபன களஞ்சியசாலைகளில் இருப்பிலுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் அநாவசியமான முறையில் பெற்றோலை களஞ்சியப்படுத்த வேண்டாம் என அமைச்சு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
30,000 மெற்றிக்தொன் பெற்றோலுடன் நாட்டிற்கு வருகைத் தந்த இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கான கப்பலொன்று திருப்பயனுப்பப்பட்டதால் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரவியுள்ளது.
இதனால் பெற்றோலை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு முழுவதும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எனினும் பெற்றோலுக்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை என பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, 20,000 மெற்றிக்தொன்னுடன் பெற்றோலுடன் கப்பலொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை தவிர தேவையானளவு மசகு எண்ணெயும் களஞ்சியசாலைகளில் உள்ளதாகவும், அவற்றினை சுத்திகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நாளாந்தம் 1800 மெற்றிக்தொன் பெற்றோல் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 2,000 மெற்றிக்தொன் பெற்றோல் நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது.
பௌர்னமி தினமான நேற்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்படாத நிலையில் நேற்று இரவு பெற்றோலுக்கான கேள்வி அதிகரித்ததால் சில எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் தீர்ந்ததாகவும் பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இன்றும் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்ளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் வாகன சாரதிகள் வரிசைகளில் காத்திருப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.