இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டி, ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இதில் இந்திய அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் போட்டியில், 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 1–0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடக்கிறது.
சூப்பர் துவக்கம்:
முதல் போட்டியில், 158 ரன்கள் சேர்த்து நல்ல துவக்கம் தந்த இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி மீண்டும் சாதிக்கலாம். ‘டாப்–ஆர்டரில்’ கேப்டன் விராத் கோஹ்லி, நம்பிக்கை அளிக்கிறார். கடந்த போட்டியில் அறிமுகமான இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், 4வது இடத்தில் களமிறக்கப்படலாம். ‘மிடில்–ஆர்டரில்’ தோனி, ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டினால் மீண்டும் வலுவான ஸ்கோரை பதிவு செய்யலாம்.
‘சுழல்’ வேட்டை:
வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், பும்ரா அசத்தி வருகின்றனர். குறிப்பாக இவர்கள், கடைசி கட்ட ஓவர்களை துல்லியமாக பந்துவீசுவது சிறப்பு. மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா, ‘மிடில்–ஓவரில்’ ரன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். முதல் போட்டியில் தலா 2 விக்கெட் கைப்பற்றி, ‘சுழல் ஜாலம்’ காட்டிய யுவேந்திர சகால், அக்சர் படேல், மீண்டும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தர காத்திருக்கின்றனர். சீனியர் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா, ஓய்வு பெற்றதால், இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஸ், 23, அறிமுக வாய்ப்பு பெறலாம்.
வில்லியம்சன் ஆறுதல்:
நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில், கோலின் மன்ரோ ஜோடி சிறப்பான துவக்கம் தர முயற்சிக்க வேண்டும். கேப்டன் வில்லியம்சன், டாம் லதாம் ஆறுதல் தருகின்றனர். இந்திய ‘சுழலை’ சமாளிக்க முடியாமல், நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறுவது பின்னடைவு. ‘மிடில்–ஆர்டரில்’ டாம் புரூஸ், கிராண்ட்ஹோம், நிகோல்ஸ் எழுச்சி கண்டால் நல்ல ஸ்கோரை பெறலாம்.
பீல்டிங்கில் கவனம்:
நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தீ, டிரண்ட் பவுல்ட் என திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்த போதிலும், விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறுகின்றனர். ‘சுழலில்’ இஷ் சோதி, ஓரளவு கைகொடுக்கிறார். இவருக்கு, மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னர் ஒத்துழைப்பு தந்தால் நல்லது. முதல் போட்டியில் நிறைய ‘கேட்ச்’ வாய்ப்புகளை வீணடித்த நியூசிலாந்து வீரர்கள் ‘பீல்டிங்கிலும்’ கவனம் செலுத்தினால் நல்லது.
12
இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, இன்னும் 12 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், இலங்கையின் தில்ஷனை (1889 ரன், 79 போட்டி) முந்தி, 2வது இடம் பிடிக்கலாம். கோஹ்லி, இதுவரை 53 போட்டியில் 17 அரைசதம் உட்பட 1878 ரன்கள் எடுத்துள்ளார்.
முதலிடத்தில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (2140 ரன், 71 போட்டி) உள்ளார்.
ஆடுகளம் எப்படி
சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில், இதுவரை ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டி மட்டுமே நடந்துள்ளது. கடந்த 2013ல் இங்கு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு (201/7, 20 ஓவர்) எதிரான போட்டியில் இந்திய அணி (202/4, 19.4 ஓவர்), 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
★ தவிர, இங்கு விளையாடிய இரண்டு ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி (எதிர்: இங்கிலாந்து, 2013 மற்றும் எதிர்: தென் ஆப்ரிக்கா, 2015) தோல்வியடைந்தது.
★ கடந்த ஆண்டு இங்கு நடந்த இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ‘டிரா’ ஆனது.
மழை வருமா
ராஜ்கோட்டில் இன்றைய வெப்ப நிலை அதிகபட்சம் 36, குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் தெளிவாக காணப்படும் என்பதால், மழை வர வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3
இன்று இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், கடந்த 5 ஆண்டுகளில், சொந்த மண்ணில் 3வது முறையாக ‘டுவென்டி–20’ தொடரை கைப்பற்றலாம். இதற்கு முன், இலங்கை (2016, 2–1), இங்கிலாந்து (2017, 2–1) அணிகளுக்கு எதிராக தொடரை வென்றிருந்தது.