டில்லியில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டியின்போது, ஆடுகளத்தின் நடுவே மர்ம நபர் ஒருவர் கார் ஓட்டி வந்து மிரட்டினார். இதனால், இஷாந்த் சர்மா(டில்லி அணி), காம்பிர்(டில்லி), ரெய்னா (உ,பி.,) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அதிர்ச்சியில் மிரண்டனர்.
இந்தியாவில், ரஞ்சி கோப்பை தொடரின் 4வது சுற்று லீக் போட்டிகள் தற்போது நடக்கிறது. டில்லி பாலம் மைதானத்தில் நடக்கும் ‛ஏ’ பிரிவு லீக் போட்டியில் உ.பி., டில்லி அணிகள் மோதுகின்றன. உ.பி., அணி முதல் இன்னிங்சில் 291 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், டில்லி அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது.
திடீரென புகுந்தது:
நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் நரங் (4), கேப்டன் இஷாந்த் (2) ஏமாற்ற, டில்லி முதல் இன்னிங்சில் 269 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பின், இரண்டாவது இன்னிங்சை உ.பி., அணி துவக்கியது. மாலை 4:40 மணிக்கு திடீரென போட்டி நடந்த ஆடுகளத்தின் நடுவே மர்ம நபர் ஒருவர் காரை ஓட்டி வந்தார். அம்பயர், வீரர்கள் தெறித்து ஓடினர். யாரையும் கண்டு கொள்ளாத அந்த நபர் ஆடுகளத்தில் இரு முறை வட்டமடித்தார். பின், ஒருவழியாக காரை நிறுத்தினார்.
பாதுகாப்பு எப்படி:
இம்மைதானம் விமானப்படைக்கு சொந்தமானது. இதனால், அந்த நபரை இத்துறை போலீசார் பிடித்து, டில்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் கிரிஷ் சர்மா என தெரியவந்தது. ‛எவ்வித பாதுகாப்பு அதிகாரிகளும் தன்னை நிறுத்தாக காரணத்தால் காரை இயக்கினேன்,’ என கூறினார். சர்வதேச வீரர்களான காம்பிர், இஷாந்த் சர்மா, ரெய்னா விளையாடும்போதே, ஒரு நபர் காருடன் மைதானத்திற்குள் நுழைந்தது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. தற்போது பயங்கரவாதிகள் வாகனங்களை ஓட்டி தான் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் வீரர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
முடிவில், ‛ரெப்ரி’ ஆடுகளத்தின் தன்மையை சோதித்து விளையாட அனுமதி தந்தார். போட்டி, ‛ரெகுலர்’ நேரத்தை விட கூடுதலாக அரை மணி நேரம் நடந்தது. ஆட்ட நேர முடிவில், உ.பி., அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்து 246 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆகாஷ்தீப்(110) அவுட்டாகாமல் இருந்தார்.
என்ன நோக்கம்
இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா கூறுகையில்,‛‛ சர்வீஸ் ஸ்போர்ட்ஸ் கன்ட்ரோல் போர்டின் மைதானத்தில்தான் (பாலம்) ரஞ்சி போட்டி நடந்தது. சர்வதேச வீரர்கள் போட்டியில் பங்கேற்றதால், மைதானத்திற்குள் நுழைந்த நபர், வேறு ஏதேனும் நோக்கத்துடன் வந்திருந்தால் பயங்கரமான சம்பவம் நடந்திருக்கும். இது குறித்து விசாரித்து வருகிறோம்,’’ என்றார்.
கடவுளுக்கு நன்றி
டில்லி அணி மானேஜர் ஷங்கர் சைனி கூறுகையில்,‛‛ நேற்றைய ஆட்டத்தின்போது நானும் மைதானத்தில்தான் இருந்தேன். நல்லவேளையாக, மைதானத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கவில்லை. கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்,’’ என்றார்.
போதையா … மனநலம் பாதிப்பா
டில்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‛‛ பாலம் மைதானத்தில் நடந்த சம்பவத்திற்கு யாரும் முறையான புகார் அளிக்கவில்லை. இருப்பினும், முதற்கட்ட விசாரணையில் நுழைவுவாயிலில் பாதுகாவலர் இல்லை என தெரியவந்துள்ளது. மைதானத்திற்குள் காரை ஓட்டிய நபர் 30 வயதுடையவர். இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மனதளவில் தெளிவில்லாத நபராக இருந்தார. குடித்திருந்ததாகவும் தெரிகிறது்,’’ என்றார்.
கைலியில் வந்தார்
டில்லி கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில்,‛‛ சம்பவம் நடந்தபோது நானும் மைதானத்தில்தான் இருந்தேன். காரை ஓட்டிய நபர் கைலி அணிந்திருந்தார். ஒரு மன நோயாளி போலத்தான் காட்சி அளித்தார்,’’ என்றார்.
மயங்க் முச்சதம்
புனேயில் நடக்கும் மற்றொரு ‛ஏ’ பிரிவு போட்டியில் மகாராஷ்டிரா, கர்நாடகா அணிகள் மோதுகின்றன. மகாராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 245 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 461 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (219), கருண் நாயர் (56) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்திலும் கருண், மயாங்க் அகர்வால் ஜோடி அசத்தியது. கருண் நாயர் (116) சதம் கடந்தார். சிறப்பாக செயல்பட்ட மயங்க் முதல் தர போட்டியில் முதல் முறையாக முச்சதம் அடித்தார். கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 628 ரன்கள் எடுத்து ‛டிக்ளேர்’ செய்தது. மயங்க் (304), கவுதம் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
கருண் சதம்:
பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய மகாராஷ்டிரா அணிக்கு சுவப்னில் (0), ஹர்ஷத் (19) ஏமாற்றினர். அன்கித் 17, நாசத் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். ருதுராஜ் அரை சதம் கடந்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், மகாராஷ்டிரா அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து, 248 ரன்கள் பின்தங்கி இருந்தது. ருதுராஜ் (61), ராகுல் திரிபாதி (33) அவுட்டாகாமல் இருந்தனர்.
3
அசத்தலாக விளையாடிய மயங்க், ரஞ்சி கோப்பை வரலாற்றில் முச்சதம் அடித்த 3வது கர்நாடகா வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், லோகேஷ் ராகுல் (ஜன. 2015, எதிர்-உ.பி., பெங்களூரு), கருண் நாயர் (மார்ச், 2015 எதிர்- தமிழகம், மும்பை) இந்த இலக்கை எட்டி இருந்தனர்.
* இந்த ‛சீசனில்’ அடிக்கப்பட்ட 3வது முச்சதம் இது. ஏற்கனவே, இமாச்சல பிரசேத அணியின் பிரசாந்த் சோப்ரா (எதிர்- பஞ்சாப்), ஆந்திராவின் ஹனுமன் விஹாரி (எதிர்- ஒடிசா) அடித்திருந்தனர். ஒட்டுமொத்த ரஞ்சி கோப்பை வரலாற்றில் 43வது முறையாக முச்சதம் பதிவானது.