அசாத்சாலி குழுவினர் விளக்கம் வழங்கியவுடனேயே ஞானசார தேரர் தெளிவு பெற்றதன் மர்மம் என்ன? என ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லால் மௌலவி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஞானசார தேரர் முஸ்லிம்கள் மீது குற்றச் சாட்டுக்களை முன் வைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல்வேறு வடிவங்களில் பலவாறான விளக்கங்கள் பல்லாயிரக்கணக்கானோரால் முன் வைக்கப்பட்டிருந்தும் அதனை எல்லாம் ஏற்றுக்கொள்ளாத ஞானசார தேரர் தரப்பு தற்போது அசாத்சாலி எண்ட் கம்பனி சொன்னவுடன் ஏற்றுக்கொண்டதன் மர்மம் என்ன ?
ஞானசார தேரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலம் தொட்டு எந்தவித அடிப்படையுமற்ற குற்றச் சாட்டுக்களை முஸ்லிம்கள் மீது அடுக்கிவருகிறார்.ஊடகங்கள் வாயிலாகவும் இன்னும் எந்தெந்த வழிகளில் எல்லாம் அவருக்கு விளக்கம் வழங்கப்பட வேண்டுமோ அத்தனை வழிகளிலும் விளக்கம் வழங்கப்பட்டது.அவற்றை எல்லாம் வைத்து சிந்தித்து தெளிவை பெற்றுக்கொள்ளாத ஞானசார தேரர்,தற்போது அசாத்சாலியும் அவரது கூட்டாளிகளும் சொன்னவுடன் தெளிவை பெற்றுக்கொண்டுள்ளார். இதுவே இவ்வாண்டின் மிகப் பெரும் நகைச்சுவையாகும்.
அதிலும் குறிப்பாக பொதுபல சேனா நிபுணர்கள் வில்பத்து விடயத்தில் தனது பிழையை ஏற்றுக்கொண்டுள்ளதாக அசாத்சாலி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் ஹிரு மற்றும் தெரண போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் எத்தனையோ விவாதங்கள் இடம்பெற்றன.
அமைச்சர் றிஷாத் எத்தனையோ ஆவன தொகுப்புக்களை வெளியிட்டிருந்தார்.பகிரங்க விவாத நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டு விளங்கப்படுத்தி இருந்தார்.அண்மையில் BMICH யில் மில்லியன் கணக்கான செலவு செய்யப்பட்டு மூன்று மொழிகளிலும் இது தொடர்பான ஆவண தொகுப்புக்கள் புத்தகங்களாக வெளியிடப்பட்டிருந்தன.
இது போன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றை எல்லாம் வைத்து சிந்தித்து தெளிவு பெற முடியாத ஞானசார தேரரும் பொதுபலவும் , தற்போது அசாத் சாலியும் அவரது கூட்டாளிகளும் சொன்னவுடன் தெளிவை பெற்றுக்கொண்டு விட்டார்கள என்றால் அதில் சிந்திக்க நிறைய விடயங்கள் உள்ளன.
சில காலங்கள் முன்பு ஞானசார தேரர் ஏதேனும் சொன்னால் அதனை எதிர்த்து கருத்து தெரிவிப்பதில் அசாத்சாலி முதன்மையானவர். அப்போது இவர் கொடுத்த விளக்கங்கள் கூட இவரின் காதுகளை எட்டவில்லை.தற்போது அசாத்சாலி என்ன புதுமையான விளக்கத்தை கொடுத்துவிட்டாரோ தெரியவில்லை.
இனி இனவாத கருத்துக்கள் எழுந்தால் உடனே அசாத்சாலி அணியினரை அனுப்பினால் போதும் அவர்களின் விளக்கங்களால் அனைவரையும் சரியான பாதையில் கொண்டு வந்துவிடலாம்.
இவ்வரசுக்கு ஞானசார தேரரின் மூலமான தேவை முடிந்துவிட்டது. அவரின் மூலம் அரங்கேற்றிய நாடகத்தை நிறைவு செய்ய வேண்டும்.இதற்கு முஸ்லிம்கள் தரப்பு ஆதரவும் வேண்டும். அதற்கு இவ்வரசின் அல்லக்கைகளான அசாத் சாலி மற்றும் அவரது கூட்டாளிகள் முஸ்லிம் தரப்பிலிருந்து ஆதரவு வழங்கி கொந்தராத்தை செய்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.