ஓய்வு ‘மூடில்’ இருக்கும் ஆஷிஷ் நெஹ்ரா, முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பலை சீண்டியுள்ளார். பிரியாணியை கூட சாப்பல் கிச்சடியாக மாற்றிவிடுவார், என, கிண்டல் அடித்துள்ளார்.
இந்திய அணியின் ‘சீனியர்’ வேகப்பந்துவீச்சாளர் நெஹ்ரா, 38. கடந்த 1999ல் அறிமுகமானார். அசார் முதல் கோஹ்லி வரை பல கேப்டன்கள் கீழ் விளையாடிய பெருமைமிக்கவர். பல்வேறு காயங்களுக்காக 12 முறை ‘ஆப்பரேஷன்’ மேற்கொண்டு ‘பீனிக்ஸ்’ பறவையாக மீண்டு வந்தவர். கடந்த 2003ல் டர்பனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி, இந்திய வெற்றிக்கு வித்திட்டவர். இதுவரை 17 டெஸ்ட்(44 விக்.,), 120 ஒருநாள் போட்டி(157 விக்.,), 26 ‘டுவென்டி–20’ போட்டியில்(34 விக்.,) பங்கேற்றுள்ளார்.
நாளை ஓய்வு:
இத்தனை ஆண்டு காலம் இந்திய அணிக்காக சேவை செய்த இவர், நாளை நியூசிலாந்துக்கு எதிராக டில்லியில் நடக்க உள்ள முதல் ‘டுவென்டி–20’ போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். தனது சொந்த ஊரில் கடைசி போட்டியில் பங்கேற்கும் மகிழ்ச்சியில் இவர் அளித்த பேட்டி:
கடந்த 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் சுவாரஸ்யமான சம்பவங்கள் அதிகம். ராமன் லாம்பா, அஜய் சர்மா, அதுல் வாசன், அஜய் ஜடேஜாவுடன் விளையாடியது மறக்க முடியாதது. இப்பயணத்தில் ஒரே ஒரு வருத்தம் என்றால், 2003ல் நடந்த உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது தான். இது மட்டும் மாறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மற்றபடி எல்லாம் விதிப்படி நடந்தது.
சாப்பல் சரியில்லை:
நிறைய பயிற்சியாளர்கள் கீழ பணியாற்றியுள்ளேன். சர்ச்சைக்குரிய கிரெக் சாப்பல் கீழ் 2005ல் இரு தொடர்களில்(இலங்கை, ஜிம்பாப்வே) மட்டும் விளையாடினேன். இவர், ‘கமகம’ பிரியாணியை கூட சாதாரண ரவா கிச்சடியாக மாற்றும் அணுகுமுறை கொண்டவர். அப்போதைய கேப்டன் கங்குலி உள்ளிட்ட பல வீரர்களிடம் மோதல் போக்கை கடைபிடித்தார்.
கிறிஸ்டன் ‘சூப்பர்’ பயிற்சியாளராக இருந்தார். போட்டியின் திட்டம் குறித்து தோனியிடம் விவாதிப்பார். களத்தில் இறங்கிவிட்டால், தோனி வழியில் குறுக்கிடமாட்டார்.
கோஹ்லியை பொறுத்தவரையில் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளார். கேப்டன் பணிக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார். இவருக்கு ரவி சாஸ்திரியின் ‘அட்வைஸ்’ கூடுதல் பலம்.
முடங்கி விடாதீர்:
என்னை பொறுத்தவரை யாரும் முடங்கி விடக்கூடாது. வேகமாக ஓட முடியாதவர்கள் மெதுவாக ஓடலாம். அது முடியாவிட்டால், நடக்கலாம். அதுவும் முடியாத பட்சத்தில், நகர்ந்தாவது செல்லுங்கள்.
இந்திய அணிக்கு பயிற்சியாளராகும் திட்டம் இப்போதைக்கு இல்லை. எனது வாழ்க்கையின் அடுத்த 20 ஆண்டுகளும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு நெஹ்ரா கூறினார்.