ஸ்பெயினின் கடும் எதிர்ப்பையும் மீறி, கட்டலோனிய மாநில பாராளுமன்றம் தன்னை சுதந்திரக் குடியரசாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
கட்டலோனிய பாராளுமன்றில் நேற்று (8) நடைபெற்ற வாக்கெடுப்பில், சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றதாகவும், இதனையடுத்து ஸ்பெயினின் ஆளுகையில் இருந்து கட்டலோனியா மாநிலம் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
கட்டலோனியாவின் ஜனாதிபதியை உடனடியாகப் பதவி விலக்கி, அம்மாநிலத்துக்கு தேர்தலை அறிவிக்குமாறு ஸ்பெயின் பிரதமர் அந்நாட்டு செனட் சபையில் அனுமதி கோரியிருந்த நிலையில் இந்த சுதந்திர அறிவிப்பை கட்டலோனியா விடுத்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா, தொடர்ந்தும் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து வந்தது. ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு, கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கப் பெறுவதாக கூறப்படுகின்றது.
ஸ்பெயின் அரசாங்கம் இவர்களது கோரிக்கையை தொடர்ந்தும் நிராகரித்தே வந்தது. இந்நிலையில், கட்டலோனிய மாநில அரசாங்கம், தனிநாடு குறித்து ஸ்பெயினின் தடையையும் மீறி பொது வாக்கெடுப்பொன்றை நடாத்தியது.
இந்த வாக்கெடுப்பை, ஸ்பெயின் அரசாங்கம் பொலிஸ் பலத்தைப் பிரயோகித்து முடக்க நடவடிக்கை எடுத்த போதும் அது சாத்தியப்படவில்லையென செய்திகள் தெரிவித்திருந்தன