கட்டாரிலுள்ள இலங்கை பாடசாலையில் நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென அங்குள்ள பெற்றோர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் முன்வைத்த கோரிக்கைக்கு நேற்று உடனடித்தீர்வு காணப்பட்டுள்ளது.
கட்டார் நாட்டுக்கு இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் அங்குள்ள இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது கட்டாரில் வாழும் இலங்கை முஸ்லிம் பெற்றோர்கள் தனது பிள்ளைகள் கல்வி பாடத்திட்டத்தில் பாரிய சவாலை சந்திப்பதாகவும் இதற்கு உடனடியாக தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கைவிடுத்தனர்.
கட்டார் நாட்டில் இலங்கைக்கு ஒப்பான பாடத்திட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாத காரணத்தினால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக காணப்படுகிறது. இதனை கருத்திற்கொண்டு, இலங்கை பாடத்திட்டத்துக்கு ஒப்பான பாடத்திட்டத்தை கட்டாரில் நாட்டிலுள்ள இலங்கை பாடசாலையில் அமுல்படுத்துமாறு பெற்றோர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
இப்பிரச்சினையை கேட்டறிந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், உடனடியாக செயற்பட்டு இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொண்டுசென்றார். பின்னர் ஜனாதிபதியும் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இப்பிரச்சினையை கட்டார் மன்னர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல்தானியிடம் முன்வைத்தனர்.
இதனை செவிமடுத்த கட்டார் மன்னர், இலங்கைக்கு ஒப்பான பாடத்திட்டத்தை கட்டாரிலு ள்ள பாடசாலையில் அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். வெகு விரைவில் இத்திட்டம் அமுல்படுத்தப்படுமென மன்னர் உறுதியளித்துள்ளார். கட்டார் மன்னரின் அனுமதியுடன் இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு தனவந்தவர் ஒருவர் முன்வந்துள்ளார்.