பாடசாலை அதிபருக்கு பட்ட பெயர் வைத்து அழைத்த மூன்று மாணவர்களையும் இரண்டு மாணவிகளையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் தெனியாய பகுதியைச் சேர்ந்த பிரபல பாடசாலை அதிபர்.
குறித்த ஐந்து மாணவ மாணவிகளும் காலை பாடசாலைக்கு செல்லும் பொழுது குறித்த பாடசாலை அதிபர் பாடசாலை வாயில் அருகில் இருப்பதைக் கண்டு “ பினா இருக்கிறார்” என்று பட்ட பெயர் வைத்து கூறியுள்ளனர்.
மாணவர்கள் கூறியதை கேட்ட ஆசிரியரொருவர் அதிபரிடம் சென்று மாணவர்கள் மேற்கண்டவாறு கூறியதாக முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் அதிபர் குறித்த ஐந்து மாணவர்களையும் தனது காரியாலயத்திற்கு அழைத்து சுமார் நான்கு மணி நேரமாக முட்டுக்காலில் இருக்கும்படி கட்டளையிட்டு கண்மூடித்தனமாக காலால் எத்தியும் கம்புகள் முறியும் படி தாக்கியுள்ளார்.
இவ்வாறு அதிபரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் ஐவரும் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் தரம் எட்டில் கல்வி பயிலும் 13 வயதுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களிடம் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த அதிபர் மாணவிகளின் தலை மயிரை பிடித்து காலால் எத்தியதாகவும் தங்களை காலை இடைவேளைக்கு உணவருந்தக் கூட செல்ல அனுமதிக்காமல் தொடர்ச்சியாக தாக்கியதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இது வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் நிலைமையையும் அவர்களின் வாக்குமூலத்தையும் கருத்தில் கொண்டு பாடசாலை அதிபரை பொலிஸார் கைது செய்து மொரவக மஜிஸ்த்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
நீதி மன்றில் ஒரு லட்சம் சரீர பிணை மூலம் அதிபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.