இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியில், டாட் ஆஸ்லே, கிளென் பிலிப்ஸ், அறிமுக வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று ஒருநாள், மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 22ல் மும்பையில் நடக்கவுள்ளது. மீதமுள்ள ஒருநாள் போட்டிகள் புனே (அக். 25), கான்பூர் (அக். 29) நகரங்களில் நடக்கவுள்ளன.
மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் டில்லி (நவ. 1), ராஜ்கோட் (நவ. 4), திருவனந்தபுரம் (நவ. 7) நகரங்களில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கு முன், நியூசிலாந்து அணி, இரண்டு (அக். 17, 19, இடம்: மும்பை) ஒருநாள் பயிற்சி போட்டியில், இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன் விளையாடுகிறது.
இதற்காக 9 பேர் கொண்ட நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 6 பேர், இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் பங்கேற்று வரும் நியூசிலாந்து ‘ஏ’ அணியில் இருந்து தேர்வு செய்யப்பட்டது.
இதில் அறிமுக வீரர்களான டாட் ஆஸ்லே, கிளென் பிலிப்ஸ் வாய்ப்பு பெற்றனர். இவர்களை தவிர, மாட் ஹென்ரி, ஹென்ரி நிக்கோல்ஸ், கோலின் முன்ரோ, ஜார்ஸ் வொர்க்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ அணியில், ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள ராஸ் டெய்லர், ஜார்ஜ் வொர்க்கர் நீக்கப்பட்டு டாம் புரூஸ், இஷ் சோதி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.