அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன நிறுவனம் இலங்கை அரசிடம் முழுமையான வரிச்சலுகை கோரியுள்ளதால் அதை வழங்குவதா? இல்லையா? என்ற விடயத்தில் தேசிய அரசுக்குள் கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரிச்சலுகை வழங்கும் யோசனைக்கு ஒரு தரப்பு ஆதரவையும், மற்றைய தரப்பு கடும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருவதாலேயே இத்தகையதொரு சூழ்நிலை உருவாகியுள்ளது.அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் கூட்டரசின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்தன. அப்போதைய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவும் போர்க்கொடி தூக்கியிருந்தார்.
எனினும், எதிர்ப்பலைகளையும் மீறி அதை அரசு குத்தகைக்கு வழங்கியது. இந்நிலையில், வரிச்சலுகை வழங்கினால் அது அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சிமாற்றத்துக்கு வழிவகுத்துவிடும் என்பதே வரிச்சலுகையை வழங்குவதை எதிர்க்கும் தரப்பின் தர்க்கமாக இருக்கின்றது.
அத்துடன், திறைசேரியிலுள்ள உயர்மட்டப் பிரமுகர்களும் இத்திட்டத்துக்கு பச்சைக்கொடி காட்ட மறுத்துவிட்டதாக அறியமுடிகின்றது.
அம்பாந்தோட்டை நிறுவனத்தை குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனத்துக்கு அதில் 70 சதவீத உரிமம் இருக்கின்றது. மீதமுள்ள 30 சதவீத உரிமம் இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
1.12 பில்லியனை மேர்ச்சன்ட் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் துறைமுகத்தில் முதலிடும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, வரிச்சலுகை வழங்கினால் அது அந்நிறுவனத்தை ஊக்குவிக்கும் என்றும், மேலதிக மூலதனப் பாய்ச்சலுக்கு அது வழிவகுக்கும் என்றும் வரிச்சலுகை வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
2017 ஜூலை 17ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட குத்தகை உடன்படிக்கையில் அதை எந்நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம் என்ற ஷரத்துஉள்ளடக்கப்பட்டுள்ளது என இலங்கை அரசு கூறினாலும் அதுபற்றி இன்னும் உத்தியோகபூர்வ உறுதியான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.