17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் ஏ பிரிவில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வலிமையான கானா அணியை சந்திக்கிறது. இதற்கு முன்னர் இந்திய அணி ஆடிய 2 ஆட்டங்களில் அமெரிக்காவிடம் 0-3 என்ற கோல்கணக்கிலும், கொலம்பியாவிடம் 1-2 என்ற கோல்கணக்கிலும் போராடித் தோற்றது. ஏ பிரிவில் இருந்து அமெரிக்க அணி 6 புள்ளிகளுடன் ஏற்கெனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தலா 3 புள்ளிகளைப் பெற்றுள்ள கானா மற்றும் கொலம்பியா அணிகள் இடையே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் போட்டி நிலவுகிறது.
2 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கலாகவே உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு சாத்தியப்படும். அப்படியே இந்திய அணி வெற்றி பெற்றாலும் கொலம்பியா இன்று அமெரிக்காவுடன் மோதும் ஆட்டத்தில் தோல்வியை சந்திக்க வேண்டும். ஒருவேளை இந்திய அணி அதிக கோல்கள் வித்தியாசத்தில் ஜெயிக்காமல் சாதாரண வகையில் வெற்றியை வசப்படுத்தினாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உருவாகக்கூடும்.
அதுவும் கொலம்பியா தோல்வியடைந்து பட்டியலில் இந்திய அணி 3-வது இடத்தை பிடித்தால் மட்டுமே சாத்தியம். ஏனேனில் 6 பிரிவுகளில் இருந்தும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் விளையாடக்கூடும் என கருதப்படுகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளரான லூயிஸ் நார்டன் டி மாடோஸ், தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதே நேரத்தில் எதிரணி அசந்திருக்கும் வேளையில் அவர்களின் கோல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் கலையையும் நம் வீரர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.
கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் இந்த உத்தியைப் பயன்படுத்தி இந்திய அணி கடுமையாகப் போராடியது. இது மற்ற அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக ஆடும் அணியைப் போல் அல்லாது அனுபவம் வாய்ந்த அணியைப் போல் இந்தியா விளையாடுவதாக அமெரிக்கா மற்றும் கொலம்பியா அணிகளின் பயிற்சியாளர்கள் பாராட்டியுள்ளனர்.
இந்திய அணிக்கு கோல்கீப்பர் தீரஜ் சிங், முதுகெலும்பாக உள்ளார். இரு ஆட்டங்களிலும் அவர் எதிரணியின் கோல் முயற்சிகளை தடுத்து பாராட்டைப் பெற்றுள்ளார். தற்காப்பு வீரர்களான அன்வர் அலி, நமித் தேஷ்பாண்டேவும் அணிக்கு கூடுதல் வலு சேர்க்கின்றனர். ராகுல், ஜீக்சன், சஞ்சீவ் ஸ்டாலின் ஆகியோரும் சிறப்பாக ஆடிவரும் நிலையில் இந்திய அணி, கானாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.