வினிசியஸ் ஜூனியர், இந்த உலகக் கோப்பையில் (U-17) பங்கேற்கவில்லை. இது கால்பந்து ரசிகர்களுக்கு இழப்பு. அவன் ஆட்டத்தைப் பார்க்க இந்திய ரசிகர்களுக்குக் கொடுத்துவைக்கவில்லை. இன்னொரு நெய்மர் உருவாவதைப் பார்க்கும் வாய்ப்பு நழுவியது. `என்னடா இது ஓவர் பில்டப்பா இருக்கே’-ன்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்றது கேக்குது… ஆனால், தம்பியின் ரெக்கார்டு அப்படி…
ஏன் வினிசியஸ் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளவில்லை?
கிளப்புகள் விரும்பினால் மட்டுமே அந்த அணியின் வீரர் தன் நாட்டுக்காக எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளமுடியும். 2013-18 வரை உள்ள ஃபிஃபா காலண்டரில் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை போட்டித் தொடர் பற்றி எந்தக் குறிப்புமில்லை. ஃபிஃபா காலண்டரில் இல்லாத இண்டர்நேஷனல் போட்டித் தொடர்களுக்காக தங்கள் வீரர்களை விளையாட அனுமதிப்பது அந்தந்த அணிகளின் உரிமை.
121 ஆண்டுகள் பழைமையான அணியும் பிரேசிலின் ‘சீரி ஏ’ லீக்கில் 5 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அணியுமான வினிசியஸின், ஃபிளெமிங்கோ க்ளப், தற்போது அந்த லீக்கில் 7-வது இடத்தில் உள்ளது. அதுவும் முதலிடத்தில் இருக்கும் கொரிந்தியன்ஸ் அணியை விட 15 புள்ளிகள் குறைவாக பெற்றுள்ளது. இதுபோன்ற நிலையில் எந்தவோர் அணியும் தங்கள் ஸ்டார் வீரர் இல்லாமல் ஆடுவது தற்கொலைக்குச் சமமானது. எனவே ஃபிளெமிங்கோ அணி வினிசியஸை நம் நாட்டில் நடக்கவிருக்கும் அண்டர் 17 உலகக்கோப்பையில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை.
கடந்த மார்ச்சில் நடந்து முடிந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான சவுத் அமெரிக்கன் சாம்பியன்ஷிப் தொடரில் 7 கோல்கள் அடித்து டாப் ஸ்கோரர் பட்டத்தைத் தட்டிச் சென்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் பிரேசிலிக்குப் பரிசளித்தான் இந்த நெய்மரின் ஜெராக்ஸ்! மே 13-ம் தேதியன்று ஃபிளெமிங்கோ சீனியர் அணிக்காகத் தன் முதல் போட்டியில் களம்கண்ட வினிசியஸ், ஜூனியர் போட்டியில் விளையாடியது வெறும் 17 நிமிடங்கள் மட்டுமே. இரண்டே நாள்கள் கழித்து ஃபிளெமிங்கோ சீனியர் அணியோடு 2022 வரை தன் ஒப்பந்தக் காலத்தை நீட்டித்தார். 45 மில்லியன் யூரோக்களை விடுவிப்பு தொகையாக அவருக்கு நிர்ணயித்தது ஃபிளெமிங்கோ க்ளப் நிர்வாகம். 10 நாள்கள் கழித்து மே 23 அன்று வினிசியஸ் ஜூனியரை 45 மில்லியன் யூரோக்கள் கொடுத்து தங்கள் அணிக்கு வாங்கியது ரியல் மாட்ரிட். அதாவது ஏறக்குறைய 347 கோடிகளை இறைத்திருக்கிறது ரியல் மாட்ரிட்.
அப்படி என்ன ஸ்பெஷல்?
பிரேசில் வீரர்களுக்கு எப்போதுமே கால்பந்து உலகில் தனியொரு மவுசு இருக்கும். உலகின் டாப் கிளப்புகள் அவர்களைக் கொத்திக்கொண்டு போக போட்டிபோடும். ஏனென்றால், பிரேசிலிலுள்ள அனைவரின் இரத்தத்திலும் கால்பந்து மோகம் ஊறிக்கிடக்கும். பிரேசிலின் டிஃபெண்டரிடம் கூட பிளேமேக்கிங் மற்றும் ஸ்கில் ஷோ இருக்கும். அதைத்தான் கால்பந்து ரசிகர்களும் விரும்புவர். அப்படிப்பட்ட ஒரு ‘ஷோ பூட்’ என்றழைக்கப்படும் பல வித்தைகளை ‘ஜஸ்ட் லைக் தட்’ என செய்யக்கூடியவர் வினிசியஸ். லெஃப்ட் விங்கர் பொசிஷன்தான் இவரது விருப்ப இடம். ஓர் இளம் குதிரையின் வேகத்தைக் கொண்ட வினிசியஸ், அட்டாக்கிங்கில் கில்லி. அதுவும் பல மூவ்களைப் பயன்படுத்தி டிஃபெண்டர்களை ஏமாற்றுவது இவருக்குக் கைவந்த கலை. பந்தை எதிரணி டிஃபெண்டரின் தலைக்குமேல் ஃபிளிக் செய்து ஏமாற்றுவதுதான் இவரது டிரேட் மார்க். எதிரணி டிஃபெண்டர்களைத் தடுமாறவைத்து முன்னேறும் டிரிபிளிங் வித்தையிலும் வல்லவர்.
அதே பிரேசில், அதே வறுமை!
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்கு அருகே உள்ள சா கொன்காலோ நகரின் பிறந்தவர். வீட்டில் வறுமை. ஆனால், கால்பந்து தண்ணிபட்ட பாடு. 5 வயதிலேயே ஃபிளெமிங்கோ அணி வினிசியஸ் மீது ஒரு கண் வைத்தது. 10 வது வயதில் தங்கள் க்ளப்பில் ஒப்பந்தம் செய்தது. 13 வது வயதில் ஃபிளெமிங்கோவுக்காக அண்டர் 15 போட்டிகளில் ஜொலிக்கத் தொடங்கிவிட்டார். ஜூனியர் லெவலில் இவரை மிஞ்ச ஆளில்லை! பிரேசில் தேசிய அணிக்காக விளையாடியபோதும் ‛பையன் ஒரு ரவுண்டு வருவான்’ எனப் பெயரெடுத்தார்.
2015 ம் ஆண்டு கொலம்பியாவில் நடந்த அண்டர் 15 சவுத் அமெரிக்கன் சாம்பியன்ஷிப் தொடரில் வினிசியஸ் 6 கோல்கள் அடித்து பிரேசிலுக்காக சாம்பியன் பட்டத்தை பெற்றுத்தந்தார். இதிலிருந்து அசுர வேகத்தில் தன் பலத்தைப் பெருக்கிக் கொள்ளத் தொடங்கிய வினிசியஸ் தனது கிளப்பான ஃபிளெமிங்கோவுக்கு அதே துடிப்போடு திரும்பினார். 2016 அக்டோபரில் நடந்த ரியோ டி ஜெனிரோ ஜூனியர் கோப்பையில் படஃபோகோ அணிக்கெதிராக கோல் அடித்து, தன் திறமையை மக்கள் மனதில் பதிவுசெய்தார். அன்றிலிருந்து இன்றுவரை வினிசியஸின் வேகம் குறையவே இல்லை. இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடந்தேறிய சவுத் அமெரிக்கன் அண்டர் 17 சாம்பியன்ஷிப் தொடரில் அவர் அடித்தது 7 கோல்கள். அந்த எழு கோல்கள்தாம் 12-வது முறையாக பிரேசில் சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக அமைந்தது. அத்தொடரின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார் வினிசியஸ். அடுத்து இந்தியாவில் நடக்கப்போகும் அண்டர் 17 உலகக் கோப்பையிலும் மெர்சல் செய்து கோப்பையை வென்று தருவார் எனவும் கால்பந்து நிபுணர்கள் கணித்தனர். உலகின் டாப் மோஸ்ட் கிளப்புகளின் கழுகுப் பார்வையும் இவர்மேல் விழுந்தது.
வினிசியஸை ஒப்பந்தம் செய்ய பல அணிகள் போட்டிபோட்டன. பரம எதிரிகளான பார்சிலோனாவும் ரியல் மாட்ரிட்டும் அதில் முன்னிலையில் இருந்தன. எப்படியோ ரேசில் முந்திய ரியல் மாட்ரிட் 45 மில்லியன் யூரோக்கள் (ரூ.347 கோடி) கொடுத்து வினிசியஸை ஒப்பந்தம் செய்துவிட்டது. இந்தத் தொகை பார்சிலோனா அளிப்பதாகச் சொன்ன தொகையை விட 15 மில்லியன் யூரோக்கள் அதிகம். ஆனால், இன்னும் ரியல் மாட்ரிட் ஒப்பந்தத்தில் அதிகாரபூர்வமாக வினிசியஸ் கையெழுத்திடவில்லை. ஏனெனில், 18 வயதாகாமல் (இண்டர்நேஷனல் டிரான்ஸ்ஃபர்) ஒரு நாட்டைச் சேர்ந்த வீரரை மற்றொரு நாட்டைச் சேர்ந்த கிளப் வாங்க முடியாது. எனவே, வினிசியஸ் அடுத்த ஜூலை மாதம் வரை ஃபிளெமிங்கோ அணியில் இருந்தாக வேண்டும்.
17 வயது வீரனை நம்பி ஒரு கால்பந்து அணி இயங்குகிறது. உலகின் மாபெரும் கிளப் அந்தச் சிறுவனை வாங்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே போட்டிபோடுகிறது. வினிசியஸின் திறமைக்கு இதைவிட வெறென்ன சான்று வேண்டும்? இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அவனது சர்வதேச அரங்கேற்றத்தைக் காணும் வாய்ப்பு நமக்கு அமையப்பெறவில்லை. ஆனால், இன்னும் சில மாதங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் வெள்ளை உடையிலும், நெய்மருடன் மஞ்சள் ஜெர்சியிலும் கலக்கும் இந்த இளம்புயல்.