இன்று இந்திய அணிக்குக் கடைசி லீக் போட்டி. கால்பந்து காதலர்களின் ஏகோபித்த ஆதரவுக்கு மத்தியில், ‘நாங்களும் உலக அளவில் சாதிப்போம்’ என்று உலகக்கோப்பையில் களமிறங்கி அசத்திவருகிறது 17 வயதுக்குள்ளான இந்திய இளம்படை. ‘ஏதோ போட்டியை நடத்துவதால் இத்தொடரில் ஆடிக்கொண்டிருக்கிறது’ என்று அணியை இகழ்ந்தவர்களுக்கு, கொலம்பியா அணியுடனான போட்டியில் திறமையால் பதில் சொல்லினர் நம் வீரர்கள். இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தாலும், ஒரு கோல் அடித்ததற்காகவே வீரர்களை உச்சிமுகர்கின்றனர் கால்பந்துப் பிரியர்கள். இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் போனாலும் யாரும் அணியைத் தூற்றப்போவதில்லை. அதற்காக ‘இதுவே போதும்’ என்று நாம் சமாதானப்பட்டு அவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏனெனில், இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
அட ஆமாங்க…இந்தியா அடுத்த ரவுண்டுக்குப் போறதுக்கான சான்ஸ் ரொம்பவே இருக்கு.
இன்று இரவு 8 மணிக்கு, டெல்லி நேரு மைதானத்தில் கானா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது இந்தியா. முதல் போட்டியில் கொலம்பியாவை 1-0 என வீழ்த்திய கானா, அடுத்த போட்டியில் அமெரிக்காவிடம் 1 கோல் வாங்கி தோல்வியுற்றது. கானா பலமான அணிதான். இடது விங்கில் ஆடும் அமினு இப்ராஹிமைச் சுற்றியே அவர்களது அட்டாகிங் மூவ்கள் அமைந்திருந்தன. தடுப்பாட்டமும் சிறப்பாக உள்ளது. கானாவை வீழ்த்துவது என்பது சாதாரண காரியமில்லை. ஆனாலும் நம் வீரர்களிடமும் நல்ல முன்னேற்றம். முதல் போட்டியில் அமெரிக்காவிடம் 3 கோல் வாங்கித் தோற்றது இந்தியா. இருந்தாலும், கோல்கீப்பர் தீரஜ், கோமல் தடால் இருவரின் பெர்ஃபாமென்ஸ் செம.
காயத்தால் கோமல் விளையாடாதபோதிலும், கொலம்பியாவுடனான போட்டியில் மிகவும் ‘டஃப்’ கொடுத்தது இந்தியா. இரண்டு முறை முன்னிலைபெறும் வாய்ப்பு நூலிழையில் நழுவியது. அபிஜித் அடித்த பந்தை கோல்கீப்பர் தடுத்துவிட, ராகுல் அடித்த ஷாட் போஸ்டில் பட்டு வெளியேறியது. இரண்டாம் பாதியில் கொலம்பியா முன்னிலை பெற்றிருந்தபோதும், நன்றாகப் போராடினார்கள் நம்ம பாய்ஸ். டிஃபண்டர் போரிஸ் கொலம்பியாவை திக்குமுக்காட வைத்தார். தீரஜ் வழக்கம்போல் மாஸ் காட்டினார். உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவின் முதல் கோலைப் பதிவுசெய்து, இந்திய கால்பந்துப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் தன் பெயரை எழுதினார் ஜேக்சன் சிங். உடனடியாக கோல் வாங்கித் தோற்றிருந்தாலும், அணியின் செயல்பாடு ஒட்டுமொத்த ரசிகர்களையும் திருப்திப்படுத்தியது.
நம் வீரர்களிடம் தெரியும் இந்த முன்னேற்றம்தான் ஒரு நம்பிக்கையை நம்மிடையே விதைக்கிறது. முன்களம், மிட்ஃபீல்டு, டிஃபன்ஸ் என்று அனைத்துத் துறையும் முன்னேற்றம் கண்டுள்ளது. வீரர்களிடையே மனதளவில் அதிகரித்திருக்கும் நம்பிக்கை அவர்களின் செயல்பாட்டில் தெரிகிறது. அதனால் இந்தியா உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் என பேராசைப் படுவது தப்பில்லை. அப்படி வென்றுவிட்டால் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தியாவின் வாய்ப்பு முழுக்க முழுக்க நம் கையில் இல்லை. பிற பிரிவுகளில் நடக்கும் மற்ற போட்டிகளின் முடிவைப் பொறுத்தே இந்தியாவின் வாய்ப்பு உறுதியாகும். அப்படி என்னல்லாம் நடந்தா இந்தியா அடுத்த சுற்றுக்குப் போகும். ஒரு ஸ்மால்…ஸாரி கொஞ்சம் பெரிய கால்குலேஷன்.
24 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் இரண்டாவது சுற்று ‘ரவுண்ட் ஆஃப் 16’. நாக் அவுட் போட்டி. 16 அணிகள் தகுதிபெறும். லீக் சுற்றின் முடிவில், 6 பிரிவுகளிலும் முறையே முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அச்சுற்றுக்கு முன்னேறும். அடுத்த 4 இடங்களுக்கு, ஒவ்வொரு பிரிவிலும் 3-ம் இடம் பிடித்த அணிகளுள் சிறந்த அணிகள் தேர்வு பெறும். அதாவது அந்த 6 அணிகளுள் அதிக புள்ளிகள் பெற்றுள்ள 4 அணிகள் best third placed teams என்ற முறையில் அடுத்து சுற்றுக்கான வாய்ப்பைப் பெறும். அதில் அணிகளின் புள்ளிகள் சமமாக இருக்கும்பட்சத்தில், கோல் வித்தியாம் அதிகமாகக் கொண்டிருக்கும் அணி தகுதி பெறும். அதுவும் சமனாக இருந்தால் அணிகள் அடித்த கோல்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதுவும் ஒன்றாக இருக்கும்பட்சத்தில் fairplay புள்ளிகள் பார்க்கப்படும். ஒவ்வொரு அணியும் வாங்கிய மஞ்சள் அட்டைக்கு -1 fairplay புள்ளியும், சிவப்பு அட்டைக்கு -2 fairplay புள்ளியும் கொடுக்கப்படும். நல்ல fairplay புள்ளிகள் வைத்திருக்கும் அணிக்கு முடிவு சாதகமாக அமையும்.
இந்திய அணி இதுவரை 1 கோல் அடித்துள்ளது. 5 கோல்கள் வாங்கியுள்ளது. அதனால் கோல் வித்தியாசம் -4. இதுவரை எந்த இந்திய வீரரும் இத்தொடரில் மஞ்சள் அட்டை பெறவில்லை. அதனால் fairplay புள்ளிகள் இந்தியாவுக்கு 0. இதுதான் இந்திய அணிக்குச் சாதகமான அம்சம். ஏனெனில் இந்திய அணியின் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள கொலம்பியாவும் கானாவும் முறையே -1, -4 fairplay புள்ளிகள் வைத்திருக்கின்றன. இது ஒருவகையில் அந்த அணிகளுக்குப் பாதகம். இனி என்னென்ன முடிவுகள் நடந்தால் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் எனப் பார்ப்போம்…
SCENARIO 1
இந்திய அணி 2 கோல்களுக்கு அதிகாமன வித்தியாசத்தில் கானாவைத் தோற்கடித்தால், இரு அணிகளும் 3 புள்ளிகளோடு சமநிலையில் இருந்தாலும், கோல்வித்தியாசத்தில் இந்தியா கானாவைவிட முன்னே நிற்கும். இது நடக்கும் பட்சத்தில் அமெரிக்க அணி கொலம்பியாவை வீழ்த்த வேண்டும். அப்போது கொலம்பியாவும் 3 புள்ளியுடன் இருக்கும். ஆனால் அமெரிக்கா 2 கோல் வித்தியாசத்திலாவது வெற்றிபெற வேண்டும். ஒருவேளை அமெரிக்கா 1 கோல் வித்தியாசத்தில் மட்டும் வெற்றி கண்டால், கொலம்பியா தன் கடைசிப் போட்டியில் அடிக்கும் கோல்களை விட இந்திய அணி 2 கோல்கள் அதிகம் அடித்திருக்க வேண்டும். ஒருவேளை 1 கோல் மட்டுமே அதிகமாக அடித்திருந்தால், மஞ்சள் அட்டைகள் பெறாமல் இருக்க வேண்டும். அப்போது fairplay புள்ளிகள் அடிப்படையில் இந்தியா கொலம்பியாவை பின்னுக்குத்தள்ளும். இவையெல்லாம் நடந்தால் ஏ பிரிவில் 2-ம் இடம்பெற்று இந்தியா நேரடியாகத் தகுதிபெறும்.