ஆஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்களின் தகவல்களை மர்ம நபர்கள் ஹேக் செய்து திருடியுள்ளனர். இந்த இரண்டு போர் விமானங்களில் ஒன்று அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து வாங்கப்பட்டதாகும். இந்த தகவல்கள் ஹேக் செய்யப்பட்டது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 கண்காணிப்பு விமானம் ஆகியவை ஆஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான மிக முக்கியமான போர் விமானங்களாகும். இந்த இரண்டு விமானங்களும் பல காலமாக ஆஸ்திரேலிய அரசின் விமானத்துறையில் முக்கிய பங்காற்றி வருகின்றது.
இதில் ஸ்டெல்த் எஃப்-3 என்ற போர் விமானம் மட்டும் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டதாகும். ரேடாரில் சிக்காத ஸ்டெல்த் ரக விமானங்களின் வடிவமைப்பு ரகசியம் அமெரிக்காவிடம் மட்டுமே இருக்கின்றது. பல நாடுகளுக்கு இந்த விமானத்தை விற்கும் அமெரிக்க அரசு இதன் வடிவமைப்பை மட்டும் ரகசியமாக வைத்துள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 கண்காணிப்பு விமானம் ஆகியவற்றின் ரகசியங்களில் சிலவற்றை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இந்த ஹேக்கிங் வேலையில் ஈடுபட்டது யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதை இவர்கள் “சைனா சோப்பார்” என்ற ஒரு கருவியை வைத்து திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சைனா சோப்பார் என்பது ஹேக்கிங் செய்வதற்காக பயன்படும் ஒரு கருவியாகும். இது சீனாவில் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது ஆஸ்திரேலிய அரசு. மேலும் இதனுடன் ஒரு போர் கப்பலின் வரைப்படமும் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.