சீனாவின் டோங்குவான் பகுதியைச் சேர்ந்த 21 வயது வூ, ஸ்மார்ட்போனில் தொடர்ந்து விளையாடி பார்வையை இழந்திருக்கிறார். அக்டோபர் முதல் தேதி வழக்கம்போல் ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் விளையாடினார். திடீரென்று வலது கண்ணில் பார்வை குறைந்தது. உடனே தூங்கிவிட்டார். மறுநாள் காலை விழித்தபோது பார்வை முற்றிலும் பறிபோயிருந்தது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். “இவரது விழித்திரை மிக மோசமாகச் சேதமடைந்திருக்கிறது. வயதானவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற பிரச்சினை வரும். அளவுக்கு அதிகமான அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட கண், இறுதியில் செயலிழந்துவிட்டது. நிதித்துறையில் வேலை செய்துவரும் வூ, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் ஸ்மார்ட்போனில் விளையாட ஆரம்பிப்பார். ஒரு நாளைக்கு 7 மணி நேரம் கூட விளையாடுவார். இதனால் கண்களுக்கு ஓய்வே இல்லாமல் போய்விட்டது. இவரது பார்வையை மீட்க முயற்சி செய்துவருகிறோம். சிறிய முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் ஃப்ளாஷ் லைட் அடித்தபோது அவரால் உணர முடியவில்லை. கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் போன்றவற்றை 60 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள். அடிக்கடி பார்வையை வேறு பக்கம் திருப்புங்கள். கண்களுக்குப் பயிற்சி கொடுங்கள். பார்வை மிக முக்கியம்” என்கிறார் வூவின் கண் மருத்துவர். “விடுமுறை நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்மார்ட்போனில் விளையாடுவேன். சில நேரங்களில் சாப்பிடுவது கூட இல்லை. சிறிது ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் விளையாட ஆரம்பிப்பேன். இரவு 2 மணிக்கு மேல் களைப்பில் தூங்கிவிடுவேன். என்னுடைய தவறு இப்போது புரிகிறது” என்கிறார் வூ.
அளவுக்கு மிஞ்சினால் பார்வையும் பறிபோகும்!
இன்று உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிறது. சிலருக்கு நோயின் காரணமாகவும் அளவான உணவு சாப்பிடவேண்டியிருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் கலோரி குறித்த கால்குலேட்டர்கள் வந்துவிட்டாலும் அதை ஒரு வழிகாட்டியாக மட்டுமே எடுத்துக்கொள்ள இயலும். பானசோனிக் நிறுவனம் CaloRieco என்ற புதிய கருவியை உருவாக்கியிருக்கிறது. நாம் சாப்பிடக்கூடிய உணவுத் தட்டை, இந்தக் கருவிக்குள் வைத்துவிட்டால் சில நொடிகளில் எவ்வளவு கலோரி என்பதைச் சொல்லிவிடுகிறது. அதுமட்டுமின்றி, அந்த உணவில் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்றவை எவ்வளவு இருக்கின்றன என்பதையும் சொல்லிவிடுகிறது. இந்தக் கருவி பெரும்பாலான உணவுகளைச் சரியாகக் கணித்துவிடுகிறது. சூப், அடர் நிற உணவுகளை கணிப்பதில் பிரச்சினை இருக்கிறது. நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்காகவே இந்தக் கருவியை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறது பானசோனிக். அடுத்த சில ஆண்டுகளில் இந்தக் கருவி விற்பனையில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் விலை பற்றிய தகவலை வெளியிடவில்லை.
உங்கள் தட்டில் எவ்வளவு கலோரி?