வடக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் நியாயமானது எனவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா, சிறைச்சாலைகளில் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியத்தருமாறு அவர்கள் கேட்கின்றனரே தவிர காணாமல் போனவர்களை தேடித்தாருங்கள் என்று கேட்கவில்லை எனத் தெரிவித்த அவர் , அவர்கள் இவ்வாறு கேட்பது நியாயமானதாகவே தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் தான் வடக்குக்கு சென்று அவர்களை சந்தித்த போது இதற்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்ததாகவும் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த பசில் ராஜபக்ஸ இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கூறியிருந்தமையான வரவேற்கத்தக்கது எனவும் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இப்போது இவ்வாறு தெரிவிப்பது வரவேற்கத்தக்கது எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்