10% கேளிக்கை வரி விதித்து தமிழ் சினிமாவுக்கு மணி மண்டபம் கட்டாதீர்கள் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழிப்படங்களுக்கு 10 சதவீத கேளிக்கை வரியும், மற்ற மொழிப் படங்களுக்கு 20 சதவீத கேளிக்கை வரியும் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் அக்டோபர் 6-ம் தேதி படங்களுக்கான முன்பதிவு அனைத்துமே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தின் முடிவில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் பேசியதாவது:
10% கேளிக்கை வரி என்பது தமிழ் திரையுலகிற்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. இந்த கேளிக்கை வரியோடு தமிழ் சினிமா செயல்பட இயலாது. இன்றைக்கு இருக்கும் சூழலில் வட்டிக்கு பணம் வாங்கி, படங்கள் தயாரித்து, விளம்பரப்படுத்தி திரையரங்குகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் போது 40 சதவீதம் வரியை அரசாங்கத்துக்கு செலுத்துவது முடியாத காரியம்.
இதனால் அக்டோபர் 6-ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகாது. தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைக்கவுள்ளோம். இந்த கேளிக்கை வரியை ரத்து செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஏனென்றால் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தில் கேளிக்கை வரி விதித்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் ஜிஎஸ்டி மட்டுமே கட்டி வருகிறார்கள். புதிய படங்கள் வெளியீடு இல்லை என்பதை வலியோடு அறிவித்திருக்கிறோம்.
சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டியதற்கு எப்படி தமிழக அரசுக்கு நன்றி சொன்னோம். 10% கேளிக்கை வரி விதித்து தமிழ் சினிமாவுக்கு மணி மண்டபம் கட்டாதீர்கள். அதை தமிழக அரசுக்கு வேண்டுகோளாக வைத்திருக்கிறோம். திருட்டு விசிடி கடுமையாக இருக்கும் சூழலில் தமிழ் சினிமா 10% கேளிக்கை வரியால் தத்தளிக்கிறது. எங்களுடைய கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறோம். முதல்வரை சந்திக்க இன்று கடிதம் கொடுக்கவுள்ளோம்.
இவ்வாறு விஷால் தெரிவித்தார்.