இங்கிலாந்தில் ரோபோக்கள் மூலம் பார்லியை விதைத்து சமீபத்தில் அறுவடை செய்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ரோபோ என்றழைக்கப்படும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் பரவி வருகிறது. மருத்துவம், ஓட்டல் பணிகள் என இருந்த அதன் சேவை தற்போது விவசாயத்திலும் வியாபித்து இருக்கிறது.
விவசாயத்துக்கு மாடுகள் மற்றும் டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இங்கிலாந்தில் விதை விதைத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், களையெடுத்தல், அறுவடை செய்தல் என அனைத்து விவசாய பணிகளையும் ரோபோவே செய்துள்ளது. இதற்கான சாதனையை இங்கிலாந்தின் ஹார்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோனாதன்கில் தலைமையிலான குழுவினர் படைத்துள்ளனர்.
இந்த ரோபோக்கள் பார்லியை விதைத்து சமீபத்தில் அறுவடை செய்தது. இவை பீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ரோபோக்கள் மூலம் அதிகளவில் உணவு உற்பத்தியை பெருக்க முடியும். இதன்மூலம் உணவு பஞ்சம் இல்லாத உலகை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.