கொஹுவளை பீரிஸ் வீதியில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ அநாதை, ஆதரவற்றவர்களின் இல்லத்தில் வசிக்கும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து 25.07.2017 அன்று கொஹுவலை பொலீஸார் அந்த விடுதியில் சோதனை நடாத்தினர்.
அதன் போது அந்த விடுதியில் அனாவசியமான விதத்தில் அதிக எண்ணிக்கையிலான CCTV கமராக்கள் இருப்பதை பொலிஸார் அவதானித்தனர். சிறுமிகள் உடைமாற்றும், உணவு உண்ணும் அறை உட்பட பல இடங்களில் கமிராகக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. சிறுமிகள் உடைமாற்றும் இடத்திலும் கமெராக்கள் இருப்பதை குறித்த இல்லத்தின் பராமரிப்பாளர் பொலிசாரிடம் ஏற்றுக் கொள்வ
கொண்டார் அதன் பின்னர் பொலிஸார் அநாதை இல்லத்தில் பணிபுரிந்த ஊழியர்கள், பாதிக்கப்பட்டதாக கருதப்படும் சிறுமிகள் ஆகியோரின் வாக்குமூலங்களை அந்த இடத்தில் இருந்தே பதிவு செய்துள்ளனர். அநாதைகள் இல்லம் அமைந்திருந்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடமும், சிறுமிகள் கல்விகற்று வந்த பாடசாலையின் ஆசிரியர்களிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 25.07.2017 அன்றே சிறுமிகள், ஊழியர்கள், சந்தேகநபர் என அனைவரும் பொலிஸாரால் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அதன்பின்பு, விடுதி மேற்பார்வையாளரின் கணவரான சந்தேகநபர் கைதுசெய்யப்படுகிறார்.
சிறுமிகள், ஊழியர்கள் என அனைவரும் அன்றைய இரவை பொலிஸ் நிலைத்திலேயே கழிக்க வேண்டி ஏற்படுகின்றது. இரண்டாவதுநாள்,பொலிஸார் இது பற்றிய விடயங்களை கங்கொடவில மஜிஸ்ரேட் நீதிமன்றத்திற்கு அறியத்தரவும், நீதிபதி களுபோவிலை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) சிறுமிகளை மருத்துவபரிசோதனைக்காக கையளிக்குமாறு பொலிஸாருக்கு பணிக்கின்றார், அத்துடன் சந்தேகநபரும் விளக்கமறியலில் வைக்கப்படுகிறார்.
முதல் நாள் இரவை பொலிஸ் நிலையத்தில் கழித்த சிறுமிகள் அனைவரும் இரண்டாம்நாள் ‘தாருன்நுஸ்ரா’ இல்லத்தில் தங்கவைக்கப்படாமல் கங்கொடவிலவில் அமைந்துள்ள சிங்கள அநாதைகள் இல்லமொன்றில் தங்கவைக்கப்படுகிறார்கள்.
அந்த அநாதை இல்லத்தில் போதிய இடவசதியின்மை காரணமாக ஒரு மண்டபத்திலேயே அன்றைய இரவைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். அப்பொழுது கூட இந்த விடயம் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு முஸ்லிம் சமூகத்தில் இருந்து எந்தவொரு நிறுவனமோ, So Called Full Time சமூக ஆர்வலர்களோ முன்வந்திருக்கவில்லை.
சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையானது (JMO Report) இந்தச் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதை அறிந்த நீதிபதி மேலதிக உறுதிப்படுத்தல்களுக்காக மனோதத்துவ வைத்தியர் ஒருவரிடமும் சிறுமிகளை கையளித்து மனோதத்துவ ரீதியான பரிசோதனைகளையும் மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணிக்கின்றார் .
சிறுமிகள் பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் அவா்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானது மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சந்தேக நபரின் நடவடிக்கைகள் காரணமாக தாம் முகம்கொடுக்கும் சிரமங்கள், துன்பங்கள் பற்றி பல தடவைகள் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களிடம் தெரியப்படுத்தியிருந்த போதிலும் எந்தவித நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லையென சிறுமிகளால் வழங்கப்பட்டுள்ள வாக்குமூலத்தில் உள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
சந்தேகநபர் குற்றச் செயல்களை CCTV கமராக்களின் கண்காணிப்பு இல்லாத விடுதியின் பின்புறத்திலேயே மேற்கொண்டுள்ளதாகவும் வாக்குமூலத்தில் மேலும் பதியப்பட்டுள்ளது. * 19 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவா் கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும் கொஹுவலை பொலிஸார் கங்கொடவில மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
மனோதத்துவ வைத்தியர் லசந்தி அக்மீமனவின் அறிக்கையிலும் இந்தச் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களில் ஐந்து சிறுமிகள் தாம் முகங்கொடுத்த பேரவலம் காரணமாக பாரிய உளவியல் சிக்கல்களுக்கு முகம்கொடுத்திருப்பதனை கண்டறிந்த வைத்தியர் லசந்தி அக்மீமன அச்சிறுமிகளுக்கு பிரத்தியேக சிகிச்சை மற்றும் மருந்துகளையும் வழங்கியுள்ளார்.
இவ்வாறான வழக்குககளில் சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இருந்தும், குற்றத்தின் பாரதூரத்தை உணர்ந்த நீதிபதி திரு. அணுஷ்க செனவிரத்ன அவர்கள் சந்தேகநபருக்கு இரண்டு தடவைகள் பிணை வழங்க மறுத்து ரிமான்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். (14 + 14 நாட்கள்). *மூன்றாவது முறை சந்தேகநபர் சார்பில் ஆஜரான முன்னணி முஸ்லிம் சட்டத்தரணிகள் சந்தேகநபரின் உடல்நிலை மற்றும் மருத்துவ ரீதியான (நீரிழிவு நோய்) காரணங்களை முன்வைத்து மன்றாடி பிணையில் விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டதற்கு ஏற்பவே சந்தேகநபர் நீதிபதியால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சிறுமிகளை சர்ச்சைக்குரிய ‘தாருன் நுஸ்ரா’ அநாதைகள் இல்லத்திற்கு வெளியே வைத்திருப்பதில் நடைமுறைச்சிக்கல்கள் காணப்பட்டன. 19 சிறுமிகளுக்கும் தேவையான இடவசதியை பெற்றுக்கொள்வது மற்றும் சிறுமிகள் ஏற்கனவே கல்வி பெற்றுவந்த பாடசாலையில் கல்வியைத் தொடருவது போன்ற காரணங்களினால் நீதிமன்ற உத்தரவின்படி இச்சிறுமிகள் ‘தாருன் நுஸ்ரா’விற்கே பொலிஸ் பாதுகாப்புடன் அவர்கள் அனுப்பட்டுள்ளனர்.