பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார், நவாஸ் ஷெரீஃப்.
பனாமா கேட் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை தீவிரமடைந்துவருகிறது. உலகிலுள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்துவருவதாக, ‘பனாமா லீக்ஸ்’ ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நவாஸ் ஷெரீஃப் மட்டுமல்லாமல், அவரின் மகள் மற்றும் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள்மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, நவாஸின் பிரதமர் பதவியை இழக்கும் அளவுக்கு விவகாரம் தீவிரமடைந்தது.
ஊழல் வழக்கால் பதவி விலகிய நவாஸ் ஷெரீஃப், தற்போது மீண்டும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக, தகுதிநீக்கம்செய்யப்பட்ட ஒருவர், கட்சியில் பொறுப்பு வகிக்கக்கூடாது என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. பொதுக்குழுவின்மூலம் கட்சித் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், நவாஸ் ஷெரீஃபை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், நவாஸ் ஷெரீஃப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.