முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றனர்.
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தரப்பால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொதுஜன மக்கள் முன்னணியை வடக்கு மாகாணத்தில் காலூன்றும் செயற்பாடுகளை முன்னெடுக்கவே அவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவரது ஆலோசகராகவும் அமைச்சராகவும் இருந்த பசில் ராஜபக்சவே, வடக்கின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகச் செயற்பட்டார். வடக்கின் வசந்தம் என்ற பெயரில், எல்லாத் திட்டங்களையும் அவரே கையாண்டார்.
அந்தக் காலகட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, பசில் ராஜபக்சவுடன் இணைந்து, வடக்கு மக்களையும், அரச நிர்வாகத்தையும் இராணுவ ஆட்சிப் பிடிக்குள் வைத்திருந்தார்.
ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், வடக்கு அரங்கில் இருந்து அகற்றப்பட்ட இவர்கள் இருவரும், மீண்டும் ஒன்றிணைந்து வடக்குக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இவர்கள் இருவரும் எதிர்வரும் 21ஆம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து மூன்று நாள்களுக்குத் தங்கியிருப்பர். இதன்போது, கடந்த ஆட்சிக்காலத்தில் தமக்கு நெருக்கமாக இருந்தவர்கள், ஒத்துழைப்பு வழங்கியவர்களை அழைத்துப் பேசத் திட்டமிட்டுள்ளனர்.
மகிந்த ஆதரவு பொதுஜன மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அமைப்பாளராக ஈ.பி.டி.பியின் முன்னாள் ஆதரவாளர் தம்பித்துரை ரஜீவ் நியமிக்கப்பட்டிருந் தார். அவருடன் இணைந்து மேலும் 40 பேருக்கு மகிந்த ஆதரவுக் கட்சியின் யாழ்ப்பாணத்துக்கான முக்கிய பொறுப்புக்களும் வழங்கப்பட்டிருந்தன.
அடுத்த சில மாதங்களில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சித் தேர்தல், மற்றும் அடுத்த ஆண்டில் நடத்தப்படவுள்ள மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை இலக்கு வைத்தே, பசில் ராஜபக்ச- சந்திரிசிறி கூட்டணி மீண்டும் வடக்கில் செயற்படத் தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.