இந்தியாவின் எந்த நவகவிஞர்களுக்கும் பாரதி நின்று பேசிய பண்பாட்டுத்தளம் இல்லை. தமிழ் பிரம்மாண்டமான ஒரு மரபிலக்கியப்பின்னணி கொண்ட தொல்மொழி. ‘வானமளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி’ .அதன் செவ்விலக்கியப் பாரம்பரியம் மகத்தானது. அவ்வாறு செவ்விலக்கியப் பாரம்பரியம் வலுவாக இருந்தமையாலேயே தமிழின் நாட்டார் பாரம்பரியமும் அதே அளவுக்கு வீச்சுடன் இருந்தது. இந்த இரு கடந்தகால விரிவுடன் வந்து நவீனகாலகட்டத்தை மோதியது தமிழ். பிறமொழிகளில் நிகழ்ந்த மோதலைப் படகுகளின் மோதல் என்றால் இதைக் கப்பலின் மோதல் என்று சொல்லவேண்டும். அந்த மோதலின் புள்ளியில் நிகழ்ந்தவன் பாரதி.
தாகூரோ,ஆசானோ, குவெம்புவோ பாரதிக்கு நிகரான ஒரு பண்பாட்டுக் களத்தை எதிர்கொள்ளவில்லை. ஒருவேளை சம்ஸ்கிருதத்தில் அல்லது பாலியில் ஒரு நவீனகவிஞன் வந்திருந்தால் அவனுடன் மட்டுமே பாரதியை ஒப்பிட்டுப்பார்க்க முடியும். பாரதியை நாம் இந்தியத் தளத்திற்குக் கொண்டுசென்று நிறுத்தும்போது இந்த அம்சத்தை அங்குள்ள வாசிப்புக்குக் கொண்டு சென்றதில்லை. பாரதியை உலகக் கவிஞர்களுடன் ஒப்பிடும்போதுகூட அரபுக் கவிஞர்கள் அல்லது சீனக் கவிஞர்கள் மட்டுமே உலக இலக்கியத்தில் சந்திக்கூடிய ஒரு சூழலை அவன் கையாண்டான் என்பதை கவனிக்கவேண்டும்
இந்த இரு தொல்மரபுகளை பாரதி எப்படி எதிர்கொண்டான் , அவற்றை எப்படி நவீனத்துவத்துடன் இணைத்தான் என்பதே அவனைப் பெருங்கவிஞனாக்குகிறது. அவன் உருவாக்கியது ஒரு பெரிய நவீன இலக்கியச் சொற்களனை. அந்தச் சொற்களனின் உருவாக்கத்தில் அவனுடைய ஒவ்வொரு கவிதைக்கும் பங்களிப்புண்டு. அவனுடைய ஒட்டுமொத்தமான படைப்புலகையும் ஒரே பெரும்படைப்பாக எடுத்துக்கொண்டு அவனை மதிப்பிடவேண்டும்.
அந்த படைப்புருவாக்கத்தில் அவனுடைய ஏற்பு மட்டுமல்ல நிராகரிப்பும் மிக முக்கியமானது. அவை ஒவ்வொன்றும் தமிழ்ப்பண்பாட்டின் அடுத்த காலகட்டத்தை உருவாக்குவதற்கான திருப்புமுனைகளாக அமைந்திருக்கின்றன. இத்தனை பிரம்மாண்டமான ஒரு மரபிலக்கியத்தின் வாரிசான பாரதி, அவற்றை கற்றுத் தேர்ந்திருந்த பண்டிதனாகிய பாரதி, இத்தனை எளிய கவியுலகை உருவாக்கியதே முதல் பெரும் அற்புதம். பிரம்மாண்டமான ஆலயக்கதவின் வெண்கலக்கீல் ஓசையே இல்லாமல் வெண்ணைபோலக் கதவைச்சுழற்றுவதைப்போல பாரதியில் தமிழ் மரபின் திசைமாற்றம் நிகழ்ந்தது.
உதாரணமாக, நம்முடைய பிரம்மாண்டமான செவ்விலக்கிய மரபு அடைமொழிகளை, வர்ணனைகளைக்கொண்டே பேசிப்பழகியது. மிகையின் உச்சத்தைக் கம்பனில் தொட்டது. எளிய நேரடியான கவிமொழியை பாரதி தேர்வு செய்தது தமிழின் திருப்புமுனை. உ.வே.சாமிநாதய்யர் போன்ற பாரதியின் சமகாலத்துத் தமிழறிஞர்கள் அனேகமாக அனைவருமே பாரதியை நிராகரித்திருப்பதையே நாம் காண்கிறோம். தன் கவிதையைத் தன் ஆன்மாவாகவே கொண்ட கவிஞனே சமகாலத்தை மீறி எழமுடியும்
கம்பனைத் தமிழ் பெருமரபின் முதல்கவிஞனாகக் கண்ட பாரதி கம்பனின் கவிதை அழகியலை முழுமையாகவே துறந்ததென்பது எளிய விஷயமல்ல. . தமிழில் பாரதி ஒரு பெருங்காவியத்தை எழுதவில்லை என்பது மட்டும் அல்ல அத்தகைய காவியமே தேவையில்லை என்ற முடிவை எடுத்ததுகூட முக்கியமானது. பாஞ்சாலி சபதம் முன்னுரையில் தன் எண்ணத்தைத் தெளிவாகவே முன்வைக்கும் பாரதி பாஞ்சாலி சபதத்தைக் கம்பராமாயணத்துக்கு நிகரான நவீன கால மாற்று என்று எண்ணியிருந்தார் என்றே கொள்ளமுடிகிறது.
பாஞ்சாலிசபதம் உட்படத் தன் கவிதைகளில் கம்பனுக்கு நேர் மாறாக எல்லா அலங்காரங்களையும் துறந்த , இயல்பையே அழகாகக் கொண்ட ஒரு மொழியை பாரதி உருவாக்குகிறான். கம்பன் எழுதிய பின் பாரதி வரை ஏறத்தாழ ஆயிரம் வருடம் கம்பனின் அழகியலே தமிழ்க்கவிதையில் நீடித்தது என்பதை நாம் பார்க்கவேண்டும். இன்றும்கூடக் காளிதாசனின் அழகியலை சம்ஸ்கிருத கவிதை தாண்டவில்லை என்பதையும் சேர்த்து சிந்திக்கவேண்டும்.
பிற இந்தியக் கவிஞர்கள் நாட்டார் அம்சங்களை எப்படிக் கவிதையில் எடுத்தாண்டார்கள்? அவர்களின் மரபே நாட்டார் மரபுக்கு மிக நெருக்கமானதுதான். உதாரணமாக இந்தியமொழிகளில் எதிலும் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் நடுவே தமிழில் உள்ளதுபோன்ற பெரும் இடைவெளி இல்லை. வங்காளியிலும் கன்னடத்திலும் நாட்டார் பாடல்களுக்கும் செவ்வியல்பாடல்களுக்கும் பெரிய வேறுபாட்டைக் கண்டுபிடிக்கமுடியாது. தமிழில் அப்படி அல்ல. அவை முற்றிலும் வெவ்வேறு அழகியல்கொண்ட இரு பெருக்கெடுப்புகள்.
அவற்றை பாரதி இணைத்த விதமே நவீனத்தமிழை உருவாக்கியது. நாட்டார் மரபிலிருந்து பாரதி எதை எடுத்துக்கொண்டான் என்பதை கவனிக்கவேண்டும்.நம் நாட்டார் மரபில் உள்ள முக்கியமான அம்சங்கள் மூன்று. 1. உணர்ச்சிகளையும் செய்திகளையும் நீட்டி நீட்டி வளர்த்திச்செல்லும் போக்கு 2. தாளக்கட்டு 3 . அலங்காரம் தவிர்த்தவையும் அனுபவத்திலிருந்து நேரடியாக வந்தவையுமான மிக எளிய படிமங்கள். பாரதி நாட்டார் மரபில் இருந்து எடுத்துக்கொண்டது அவற்றின் சரளத்தன்மையை மட்டுமே.
அதாவது இரண்டாயிரம் வருடத்து பேரிலக்கிய மரபு எதை இழந்திருந்ததோ அதை பாரதி நாட்டார் மரபிலிருந்து எடுத்துக்கொண்டான். கருவில், கூறல்முறையில் எல்லாம் செவ்வியல் ஓங்கிய ஒருநவீன காவியத்தில்
‘பூமி யதிர்ச்சி உண்டாச்சு-விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே -என்று
சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்!
என நாட்டார்பாடலின் சரளமான வேகம் நிகழ்ந்திருப்பதையே பாரதியின் அபாரமான தனித்தன்மையாகக் கொள்ளவேண்டும். புரிசை கண்ணப்ப தம்புரான் இந்த வரிகளை நாட்டார்கலையான தெருக்கூத்தில் திரும்பக் கோண்டுசென்று சாதாரணமாகப் பயன்படுத்தமுடிகிறது என்பதே முக்கியமானது.
அதேபோல ஐரோப்பிய நவீனத்துவத்தை எப்படி பாரதி எதிர்கொண்டான் என்பதும் அவனை மதிப்பிடுவதற்கு மிக முக்கியமானது. ஐரோப்பிய நவீனத்துவத்தை இந்தியர் இருவகையிலேயே எதிர்கொண்டிருக்கிறார்கள். ஒன்று பழம்பெருமைபேசி. இன்னொன்று பழமையைத் தூக்கிவீசி நவீனத்துவம் நோக்கிப்பாய்ந்து சென்று. ‘பழமை பழமை என்று பாவனை பேசலின்றி பழமை இருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவார்?’ என இரு தரப்புக்குமே பதில் சொல்கிறான் பாரதி.
மரபின் மிகச்சிறந்த பகுதியைக்கொண்டு நவீனத்துவத்தின் மிகச்சிறந்த பகுதியை எதிர்கொள்வதே பாரதியின் வழியாக இருந்தது. மிகச்சிறந்த உதாரணம் வசனகவிதைகள். வால்ட் விட்மனை உபநிடதங்களின் மொழியால் எதிர்கொண்டு இரண்டுக்கும் அப்பாலுள்ள ஒரு எல்லையை தீண்ட எழுகிறான். ஆங்கில plain poetry வடிவின் சாத்தியங்களை தொடும் குயில்பாட்டு நவீன வேதாந்த உள்ளடக்கம் கொண்ட ஒரு நீண்ட நாடகீயத்தன்னுரையை கையாள்கிறது.
பாரதியின் ஒட்டுமொத்தக் கவியுலகையும் இந்த மூன்று பெரும்மரபுகளையும் அவன் எங்கெங்கு எப்படியெல்லாம் இணைக்கிறான், எவற்றை விலக்குகிறான் எவற்றை எடுத்துக்கொள்கிறான் என்ற கோணத்தில் விரிவாகவே வாசிக்கவேண்டும். அனேகமாக ஒவ்வொரு கவிதையிலும் அந்த ஊடுபாவுகளின் பின்னல் நிகழ்ந்திருக்கிறது. ஆகவே அவனுடைய ஒட்டுமொத்தகவிதைப்படலமே முக்கியமானது
பாரதியைப் பிற இந்தியக் கவிஞர்களுடன் ஒப்பிடுவதென்றால் இவ்வாறு ஒட்டுமொத்தமாக, அவன் நின்றுபேசிய சூழல் குறித்த விரிவான விளக்கத்துடன், எடுத்துக்கொண்டுதான் செய்யவேண்டும். அவ்வாறு இந்தியச் சூழலில் ஒரு ஆய்வோ ஒப்பீடோ நிகழ்ந்ததில்லை. அதைச்செய்யும் அளவு ஆற்றலுடன் பாரதியை எவரும் இந்தியச்சூழலில், எந்த மொழி வழியாகவும், எடுத்துச்சென்றதில்லை. அர்த்தமற்ற உதிரி மொழியாக்கங்கள் வழியாகவே பாரதியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.