நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நாட்டின் ஆறு மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ் அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கு அபாயம் இருக்கின்றது. ஏனைய மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் காணப்படுகிறது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை, புளத்சிங்கள, பலிந்தநுவர ஆகிய பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் மண்சரிவு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும், காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், யத்தளமத்த பிரதேசத்திலும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தேசிய கட்டட ஆய்வுகள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் குக்குலே கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததால் அதன் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் அதனை அண்டிய பகுதியில் வாழ்ந்து வந்த மக்களை பாதுகாப்பான பகுதிகளில் குடியமர்த்துவதற்கு அரசாங்கத்தினால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் கம்பஹா, கொழும்பு உட்பட பிரதான நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் தற்போது சிறு அளவிலான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தொடர்ந்து அவதானம் செலுத்தப்படும்.
மேலும் அனர்த்த நிலையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. துரிதகதியில் உதவுவதற்கு இராணுவத்தினருக்கும் இது தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெள்ளம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மக்களை பாதுகாப்பதற்கு இரத்தினபுரி மாவட்டத்திற்கு 5 தண்ணீர் பவுஸர்களும் 15 படகுகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் களுத்துறை மாவட்டத்திற்கு 40 படகுகளும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு 14 படகுகளும், வழங்கப்பட்டு சகல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அனர்த்த முகாமைத்துவத் தின் நிவாரண உதவிப் பிரிவினர் 24 மணித்தியால சேவையை வழங்கவுள்ளதுடன் உதவிகளையும் கோர முடியும் என்றார்.