கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிறிலங்காவுடனும் இந்தியாவுடனும் ஜப்பான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார்.
“திருகோணமலை ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆழ்கடல் துறைமுகம். அங்கு அபிவிருத்தி வாய்ப்புகள் நிறைய உள்ளன.
திருகோணமலை துறைமுகத்தில் இரவு நேரத்தில் கப்பல்களின் நகர்வுகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஏற்ற இலத்திரனியல் கருவிகளை வழங்க ஜப்பான் இணங்கியுள்ளது.
எதிர்காலத்தில் இந்த துறைமுகத்தை எவ்வாறு சிறப்பாக அபிவிருத்தி செய்யலாம் என்பது குறித்து இந்தியாவுடன் நாங்கள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம்.
இன்னமும் உறுதியான எந்த திட்டமும் இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.