நடிகை கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பல்சர் சுனில், திலீப்பை தனக்கு நன்கு தெரியும் என்று கூறி அவரை சிறைக்கு அனுப்பினார். திலீப்பின் மனைவி காவ்யா மாதவனை ‘மேடம்’ என கூறி அவரையும் இந்த விவகாரத்தில் இழுத்துவிட்டுள்ளார் அதுமட்டுமல்ல, காவ்யா மாதவனிடம் தான் கார் டிரைவராகவும் இருந்ததாக கூறியுள்ளார். இந்தநிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் நடைபெற்ற காவ்யா மாதவனின் தம்பி மிதுன் மாதவன் திருமணத்தில் பல்சர் சுனில் கலந்துகொண்டார் என சோஷியல் மீடியாவில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை கிளப்பி வருகிறது.
இந்தநிலையில் இந்த செய்தி குறித்து மிதுன் மாதவன் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்தார். அதில், “இந்தமுறை நாங்கள் யாரும் ஓணம் கொண்டாடவில்லை. ரொம்பவே கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம். எங்கள் குடும்பத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத யாரோ ஒரு மூன்றாந்தர கிரிமினலான பல்சர் சுனில் தான் இதற்கு காரணம். இப்போது என் திருமணத்தில் அவர் கலந்து கொண்டார் என ஒரு பொய் செய்தியை பரவ விட்டுள்ளார்கள். அதற்கு ஆதாரம் என ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார்கள். அவர் யாரென்றே தெரியாதபோது நாங்கள் எப்படி அவரை அழைத்திருக்க முடியும்.. போலீஸ் விசாரணையில் தெரிந்துவிடும் அது உண்மையா இல்லை என்று” என விளக்கம் அளித்துள்ளார்.