புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகின்ற இலங்கையின் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இறைவனுக்காகவும், தமது சகோதர மனிதர்களுக்காகவும் ஒருவர் செய்யக் கூடிய தியாகத்தின் முக்கியத்துவத்தை புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினமானது பிரதிபலிக்கச் செய்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சமய நம்பிக்கையை முதன்மைப்படுத்தி வழிபாடுகளில் ஈடுபடல், வறிய மக்களுக்கு உதவுதல், நோன்பு நோற்றல் மற்றும் தியாகம் செய்தல் போன்ற பண்புகள் இஸ்லாம் சமயத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.
பல்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும், ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்கும் உதவுகின்ற அர்ப்பணிப்பின் முக்கியத்துவம் பற்றி இன்றைய நாளில் கொண்டாடப்படுகின்ற புனித ஹஜ்ஜுப் பெருநாளின் ஊடாக நினைவூட்டப்படுகின்றது.
இத்தினத்திலே, புனித ஹஜ்ஜுப் பெருநாளின் உண்மையான தாற்பரியத்தை உணர்ந்து ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, மற்றையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்குமாறு நான் இலங்கை மக்களிடம் மிகவும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
அதனூடாக அர்ப்பணிப்பின் உண்மைத் தன்மையினை எமது சகோதர மக்களிடம் கொண்டு செல்ல வாய்ப்புக்கிட்டுகின்றது.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.