கென்யாவில் பிளாஸ்டிக் பைகளுக்கு நேற்று திங்கட்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் எவராவது பிளாஸ்டிக் பைகளை விற்பதோ அன்றி உற்பத்தி செய்வதோ கண்டுபிடிக்கப்பட்டால் அவர் 38,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான தண்டப் பண விதிப்பை அல்லது 4 வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கவே பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கூறுகின்ற அதேசமயம், அந்தப் பைகளை உற்பத்தி செய்பவர்கள் மேற்படி தடையால் 80,000 வேலை வாய்ப்புகள் வரை இழக்கப்படலாம் என வாதிட்டு வந்தனர்.
இந்தத் தடைக்கு எதிராக நீதிமன்றத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட சவால்கள் காரணமாக அந்தத் தடையை நடைமுறைப்படுத்துவது பல வருட கால தாமதத்தை எதிர்கொண்டது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தடை தொடர்பான மேன்முறையீட்டை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் மேற்படி தடைக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
இது பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கும் முகமாக கடந்த 10 வருட காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது முயற்சியாகும்.
கென்ய மக்கள் ஒரு மாதத்துக்கு 24 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை உபயோகித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.