உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஜப்பான் வீராங்கனையான நொசோமி ஒகுஹராவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியின் முதல் செட்டில் ஆரம்பத்தில் இருந்தே சாய்னா நெவால் ஆதிக்கம் செலுத்தினார். அவரது ஸ்மேஷ்களையும், பிளேசிங்கையும் சமாளிக்க முடியாமல் திணறிய ஒகுஹரா, புள்ளிகளைச் சேர்க்க மிகவும் சிரமப்பட்டார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 11-6 என்று முன்னிலை பெற்ற சாய்னா நெவால், அதே வேகத்தில் முதல் செட்டை 21-12 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.
முதல் செட்டை இழந்த நிலையில் 2-வது செட்டில் கடுமையாக போராடிய ஒகுஹாரா, இந்த செட்டை 21- 17 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். இரு வீராங்கனைகளும் தலா ஒரு செட்டில் வென்றதால் 3வது செட் ஆட்டம் பரபரப்பானது. இந்த செட்டில் நெவால் சோர்வாக காணப்பட்டார். அதே நேரத்தில் ஒகுஹரா, ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாய்னா நெவால் 10-21 என அந்த செட்டை இழந்தார். இதன்மூலம் 21-12, 17-21, 10-21 என்ற புள்ளிக்கணக்கில் தோற்றார். இப்போட்டியில் தோற்றபோதிலும் அரை இறுதிச் சுற்று வரை முன்னேறியதால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
முன்னதாக நேற்று முன்தினம் நடந்த கால் இறுதி ஆட்டத்தில், சாய்னா நெவால், ஸ்காட்லாந்து வீராங்கனையான கிறிஸ்டி கில்மோரிடம் 21-19, 18-21, 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இப்போட்டியில் வென்ற பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், “ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது நான் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். அதையும் மீறி ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டேன். இதனால் அந்த காயம் மேலும் தீவிரமானது. அதிலிருந்து மீள நான் கடுமையாக போராட வேண்டி இருந்தது. தற்போதுகூட அதிலிருந்து முழுமையாக குணமடையவில்லை. ரியோ ஒலிம்பிக் போட்டியில் நான் பங்கேற்றிருக்க கூடாது” என்றார்.
ஆண்களுக்கான அரை இறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீரர் விக்டர் அலெக்சான் 21-9, 21-10 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீரர் லாங் சென்னை வீழ்த்தினார். இதன்மூலம் கடந்த 16 ஆண்டுகளில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் டென்மார்க் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.